பொதுத் தேர்தலில் பதிலடி கொடுப்போம்! சஜித் சூளுரை

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிலடி கொடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வீழ்ச்சியொன்று ஏற்பட்டது. இந்த வீழ்ச்சிக்குள் பல்வேறு பொறுப்புக்கள் என்று கூறப்படுகின்ற நிலையில், அந்த கடமையும், பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

வெற்றிக்கு உரிமைகூறுவோர் அதிகம், ஆனால் தோல்விக்கு உரிமையாளர்களே கிடையாது என்று கூறுவார்கள். ஆனாலும் கூட்டணி என்கிற வகையில் நான் வேட்பாளராக களமிறங்கினேன்.

யார் என்ன சொன்னாலும் நான் தோல்விக்கான பொறுப்பை ஏற்பதோடு தோல்வியின் பின் பிரதித் தலைவர் பொறுப்பிலிருந்தும் நீங்கினேன். அதுவே எந்தவொரு தலைமைத்துவத்தினுடைய பண்பாகும்.

வரலாற்றில் வீழ்ச்சிகள், தோல்விகள் ஏற்பட்டபோது கட்சி ஆதரவாளர்களைக் கைவிடவில்லை. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்ய ஜனநாயக ரீதியில் அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்.

அதற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் நான் தயார் என்பதை அறிவிக்கின்றேன். எந்தவொரு காரணத்திற்காகவும் பதவிகளை எதிர்பார்த்து அரசியலை நாம் செய்வதில்லை. பதவிகள் என்பது பல சந்தர்ப்பங்களில் தற்காலிகமானவைகளே.

எமக்கு இருக்கின்ற உயர்ந்த பதவிதான் மக்களின் ஆசிர்வாதம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிக்காக பிரிவடையவோ, கட்சியை பிளவடையச்செய்யவோ மாட்டோம்.

அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு எதிர்கால வெற்றிக்காக மக்களை பலப்படுத்தி தலைமைத்துவத்தை வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...