சர்வதேசம் எம்மை ஏமாற்ற முடியாது: செல்வம் அடைக்கலநாதன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாம் அரசாங்கத்திற்கு அடிபணியவில்லை, மாறாக சர்வதேசம் அரசாங்கத்திடம் நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை நாம் உருவாக்கியிருக்கின்றோம் என நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளர்.

யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்று நடைபெற்று வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இனிவரும் காலங்களில் ஏற்படும் சவாலை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

யுத்தத்தின் பிற்பாடு கடந்த பத்து வருட காலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக, அவர்களுடைய அபிலாசைகளை தமது அபிலாசைகளாக ஏற்று அரசியல் நீரோட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாகச் செயற்படுகின்றது.

கடந்த ஐந்தாண்டுகளில் அரசிற்கு ஆதரவளித்து, வெளியே நின்று எமது மக்களின் உரிமைக்காக அரசிற்கு பலத்த அழுத்தங்களை பிரயோகித்தோம்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலர் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் சிங்கள கட்சிகள் என்றாலும் பரவாயில்லை.

அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் தமிழ் கட்சிகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இனிவரும் அரசாங்கத்தை எம்மால் தான் தீர்மானிக்க முடியும்.

அரசிடம் தமிழர்களின் உரிமையைத் தட்டிக்கேட்கின்ற திறன் கூட்டமைப்பிற்கே உண்டு. எதிர்காலங்களில் வாக்குகள் உடைக்கப்படும்போது, எமது உரிமை, எமது பூர்வீக வாழிடங்கள் பறிபோகின்ற நிலை உருவாகும்.

எமது உரிமை, பூர்வீகம் பற்றி சிந்திக்காவிட்டால், சிங்களம் வடக்கு, கிழக்கில் காலூன்றும் நிலைதோன்றும். அதன் பிற்பாடு எதைப் பேசியும் பலனில்லை.

காய்க்கின்ற மரங்களுக்கே கல்லெறி விழும், நன்மை செய்கின்ற எமக்கு பலரும் பல்வேறுபட்ட விமர்சனங்களையும் செய்வார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை செயலிழக்க செய்யும் செயற்பாடுகள் தற்போது மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. எழுபது ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி சிறப்பாக பயணப்படுகிறது.

தமிழரசுக் கட்சியினுடைய வரலாறு என்பது, அர்பணிப்பு மிக்க தலைவர்கள், உறுப்பினர்கள், மக்களின் அயராத உழைப்பினால் தொடர்ந்து சிறந்து விளங்குகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தால் 20 ஆசனங்களை பெற முடியும்.

எங்களுடைய மக்களுக்கு காணி பிரச்சினைகள், காணாமல் போனோருடைய பிரச்சினைகள் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எமது மக்களுடைய விடுதலையை, உரிமைகளைப் பிரதிபலிக்கின்ற வகையில் நாங்கள் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை, எமது நியாயப்பாட்டை சொல்லியிருக்கின்றோம்.

சிலர் நாம் அரசாங்கதிற்கு சோடை போய்விட்டதாகச் சொல்கின்றார்கள். அவ்வாறான விமர்சனங்களை செய்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.

நாம் அரசாங்கத்திற்கு அடிபணியவில்லை, மாறாக சர்வதேசம் அரசாங்கத்திடம் ஒரு நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.

சர்வதேசம் எம்மை ஏமாற்ற முடியாது. அரசாங்கத்துடன் சேர்வது நோக்கமல்ல அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு எதிர்வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...