பல தியாகங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட தலைவர்களால் உருவாக்கப்பட்டது இலங்கை தமிழரசுக் கட்சி

Report Print Sumi in அரசியல்

பல தியாகங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட தீர்க்கதரிசனமுள்ள பல தலைவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடாத்தியுள்ளனர் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும்,

ஒரு சீரிய தலைவன். தான் வழி நடாத்துபவனாகவும் முன்மாதிரியான செயற்பாட்டாளனாகவும் தனது அணியின் நம்பிக்கைக்குரியவனாகவும் அதன் மீதான ஆளுமை கொண்டவனாகவும் சமகால மற்றும் எதிர்காலத்தை ஆராய்ந்து எதிர்வு கூறக்கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அமரர்எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தந்தை செல்வா எனவும் ஈழத்துக்காந்தி எனவும் அரசியல் தீர்க்கத்தரிசி எனவும் அடையாளமிடப்பட்டவர். அவர் அத்தகையதொரு சிறந்த தலைவர்.

1947ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய தந்தை செல்வநாயகம் சுதந்திரத்துக்குப் பின்னரான டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கம் கொணர்ந்த மலையக தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்ததன் பின்னணியிலயே இலங்கைத் தமிழரசுக் கட்சியை 18.12.1949 ஆம் திகதி தாபித்தார்.

ஈ.எம்.வி.நாகநாதன், கு.வன்னியசிங்கம் போன்றவர்களும் இவருடன் இணைந்து கொண்டனர். மலையகத் தமிழ் மக்களுக்கு இன்று நடப்பது நாளை எமக்கும் நடக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் தமிழ்பேசும் மக்களின் கௌரவமான வாழ்வுக்கு ஒரு சுயாட்சிக் கட்டமைப்புத்தேவை என்று கருதியதாலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இவ்வாறு செயற்படும் போது தாமும் தம்முடன் சம்பந்தப்பட்டோரும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிந்தும் இந்த முடிவை தெளிவாகவும் துணிவாகவும் முன்னெடுத்தார். கட்சியின் அங்குரார்ப்பண நாளிலேயே தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அமைப்பு, சுயாட்சி, சுரண்டல் ஒழிந்த சோசலிஷப் பொருளாதாரம், ஒரு தமிழ் சுயாட்சி மாகாணமும், ஒரு சுயாட்சி சிங்கள மாகாணமும் இணைந்த பொதுவான மத்திய அரசாங்கம் அமைத்தல் என்ற கொள்கையை கட்சியின் இலக்காகவும் இலட்சியமாகவும் வரையறை செய்திருந்தார்.

சம்பந்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 வரை பணியாற்றியதுடன் அந்த ஆண்டில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் மாவை சேனாதிராஜாவை தலைவராக்கி விட்டு தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி வருகின்றார்.தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவராகவும் உள்ளார்.

ஆயுத போராட்ட காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகள் மற்றும் அபிலாசைகள் மழுங்கடிக்கப்படாமல் தொடர்ந்து முன்னெடுத்து வரும் தலைவராக இவர் விளங்குகின்றார்.

இவற்றுக்கு மேலாக சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் இரா.சம்பந்தன் பலரையும் இணைத்து முரண்பாடுகளுக்கு இடையில் உடன்பாடு கண்டு இராசதந்திர ரீதியில் செயற்பட்டு வருவதையும் நாங்கள் காண்கின்றோம்.

இவருடைய செழிமையான அரசியல் சாணக்கியத்துவம் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் அர்ப்பணிப்புடையவராகவும் அங்கீகரிக்கப்படுபவராகவும் விளங்குகின்றார்.

இவருடைய காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

மாவை சேனாதிராஜா முழு வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் மக்களையும் நேராக அறிந்தவராக விளங்குகின்றார். அதனாலேயே அவர் அம்பாறை தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றிருந்தார்.

அவரை பொறுத்தவரையில் எல்லோரையும் அன்புடன் அரவணைத்து செல்கின்ற சுபாவம் கொண்டமையால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை தம்மோடு இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகின்றார்.

மாவை சேனாதிராஜா இக்கட்டான காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொது செயலாளராக இருந்து அதனைப் பாதுகாத்தவர் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

இப்படியான பல ஆளுமை மிக்க அர்ப்பணிப்புமிக்க தலைவர்களின் வழிவந்த தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் அதன் தமிழனம் சார்ந்த உரிமைகள் யாவற்றிலும் பற்றுறுதியுடன் செயற்பட்டு தமிழ் தேசிய இனம் இந்த நாட்டில் தனது இன, தனித்துவ அடையாளத்தையும் கலை,கலாசார,மொழி,சமய உரிமைகளை பாதுகாக்கக் கூடியவகையிலான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.