காணாமல்போனோருக்கு பொறுப்பு கோட்டாபயவே: எம்.ஏ.சுமந்திரன்

Report Print Rakesh in அரசியல்

காணாமல் போனோர் விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவையே சாரும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டது எனச் சொல்லி தப்பிக் கொள்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த சமயம் தான் அனைவரும் போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆகவே, அதற்காகப் பொறுப்புக் கூறவேண்டியது இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்‌சவைத்தான் சாரும்.

போர்க் காலத்தில் பலர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சொல்வது ஒரு கூற்று. ஆனால், போர் முடிவடைந்த கையோடு போர்ச் சூழ்நிலைகளில் இருந்து வெளிவருகின்ற மக்கள் அரச அறிவிப்பின் காரணமாகத் தங்கள் இளையவர்களை அரச படையினரிடையே பாரம் கொடுத்தது வேறொரு விடயம்.

அது காணாமல்போன விடயம் அல்ல. அவர்களிடம் சரணடைவதற்குக் கொடுக்கப்பட்டவர்கள் எங்கே என்று தெரியாத சூழ்நிலை இருக்கின்றது.

தேர்தலுக்கு முன்னர் இந்தக் கேள்வியை கோட்டாபயவிடம் கேட்டபோது அவர் மழுப்பினார். எதிர்காலத்தை நோக்கி மட்டும் பார்ப்போம் என்றும் சொன்னார்.

அத்தோடு பிற்காலத்தை நோக்கி ஏன் பார்க்கின்றீர்கள் என்றும் அவர் கேட்டார். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திக்குத் திணறியதை நாங்கள் பார்த்தோம். ஆனால், அவர் அதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அரசியல் மயப்படுத்தல் என்பது வேறு விடயம். எல்லா விடயங்களும் அரசியல் மயப்படுத்தப்படும். ஆகையால் நாங்கள் கேட்கின்ற கேள்விக்குப் பதில் அதுவல்ல.

உங்களிடத்தில் பாரங்கொடுக்கப்பட்டவர்கள், உங்களிடம் சரணடைந்தவர்கள் எங்கே என்று கேட்டால் அதற்குச் சரியான பதிலைச் சொல்ல வேண்டுமே தவிர இது அரசியல் மயப்படுத்தப்பட்ட கேள்வி என்று சொல்லித் தப்பிக்கொள்வதற்கு நாங்கள் இடங்கொடுக்கமாட்டோம் என்றார்.

Latest Offers

loading...