சஜித் ஜனாதிபதி ஆகிருந்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைத்திருக்கும்: பழனி திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகிருந்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கோட்டாபாய ராஜபக்ச வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகியுள்ளார். எனவே, அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு உடனடியாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரப்பத்தனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாங்கள் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஆனால், இந்த புதிய ஆட்சி வந்ததன் பிறகு மலையக மக்களுக்கு எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் இடம்பெறவில்லை. எதிர்காலத்திலாவது அபிவிருத்தி ஏதும் இடம்பெறுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் மக்கள் நிச்சயமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கு கூடுதலான வாக்குகளை அளித்து அமோக வெற்றியை பெற்று தருவார்கள் என நம்பிக்கை உள்ளது.

அதேவேளை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 20 பேர்ச் காணியுடன் தனி வீடு, தனி பல்கலைகழகம் கட்டிக்கொடுக்கப்படும் என்பது உட்பட மேலும் பல உறுதி மொழிகளை அவர்கள் வழங்கியிருந்தனர்.

ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளில் தற்போது வந்திருந்தாலும் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அவை நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றார்கள்.

நாமும் அதனையே வலியுறுத்துகின்றோம். மலையக மக்களின் நலன்கள் கருதி முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு எதிரணியில் இருந்தாலும் நாங்கள் முழு ஆதரவினையும் வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.