எம்.சி.சி. உடன்படிக்கைக்கு எதிராக வரையப்பட்ட ஓவியத்தை அவசர அவசரமாக அழிப்பது ஏன்?

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திடம் தூர நோக்கு சிந்தனை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கூறியுள்ளார்.

சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பதே அதன் கொள்கையாக மாறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலருடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும், பாலும் பாய்ந்தோடும் என்ற தொனியில் ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் வீராப்பு பேசினர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தம் குப்பை தொட்டியில் வீசப்படும் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டமை பெரும் தவறு என்றும் கருத்துகளை முன்வைத்து வந்தனர்.

எனினும், ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பஞ்சோந்திகள் போல் கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக எம்.சி.சி. உடன்படிக்கை நிராகரிக்கப்படாது என அறிவித்துள்ளதுடன், அது நாட்டுக்கு நன்மை பயக்க கூடியது எனவும் விளக்கமளித்து வருகின்றனர்.

அன்று கசப்பு மாத்திரையாக தெரிந்தது இன்று கரும்புபோல் இனிப்பது எப்படி? அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்திலும் நெகிழ்வு போக்கை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

எனவே, இந்த அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையும், உறுதியான கொள்கையும் இல்லை என்பது தற்போதே உறுதியாகி விட்டது.

அதேவேளை, ஜனாதிபதியின் எண்ணத்தில் உதித்த நாட்டை தூய்மைபடுத்தும் திட்டத்தின் கீழ் பொது இடங்களிலுள்ள சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இளைஞர்களும், பொது அமைப்புகளும் தாமாக முன்வந்து செய்கின்றனர். இளைஞர்களின் உத்வேகத்தை நாம் வரவேற்கின்றோம்.

ஆனாலும், பொதுவெளியில் ஓவியம் வரையும் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எமது நாட்டில் அவ்வாறு நடைபெறுகின்றதா?

யார் வேண்டுமானாலும் - எதை வேண்டுமானாலும் வரையலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஓர் இனத்தை அவமதிக்கும் விதத்திலும், ஆக்கிரமிக்கும் வகையில்கூட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மனங்களை புண்படுத்தும் வகையிலும், பழைய கசப்பான சம்பவங்களை மீள் நினைவூட்டும் வகையிலும் சில சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

ஏன்! எம்.சி.சி. உடன்படிக்கைக்கு எதிராக வரையப்பட்ட ஓவியத்தை அவசர அவசரமாக அழித்து வருகின்றனர்.

ஆகவே, ஓர் சிறுவிடயத்தைகூட அரசாங்கத்தால் முறையாக திட்டமிடவும், வழிநடத்த முடியாமலும் உள்ளது.

சுவரோவியம் திட்டத்தைகூட முறையாக முன்னெடுக்க தெரியாத ஆட்சியாளர்கள், நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை எவ்வாறு வண்ணமயமாக்குவார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

Latest Offers

loading...