பிரதமரின் இளைய புதல்வர் யாழ். குடாநாட்டிற்கு விசேட விஜயம்

Report Print Sujitha Sri in அரசியல்

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச யாழ். குடாநாட்டிற்கு இன்றைய தினம் விசேட விஜயமொன்றை செய்துள்ளார்.

இதன்போது அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்பின்னர் யாழில் சுவரோவியங்கள் வரையப்பட்டு வரும் இடத்திற்கு சென்று குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் தேவாலயங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே இடம்பெறும் வாள்வெட்டு உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் சுபீட்சமான இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும், அதனை இலங்கையின் மதத்தலைவர்கள் முன்கொண்டு செல்வது சிறந்தது என்பது தொடர்பான கருத்துக்களையும் ஆயருடன் பரிமாறிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் தனது பாரியாருடன், ஆயரிடம் ஆசியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.