கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன்

Report Print Thileepan Thileepan in அரசியல்

இன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு பதிய அரசியல் தலைமை தேவை என்பதை வவுனியா மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகளுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் இருக்கக் கூடிய முக்கியஸ்தர்களுக்கும், எமக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பானது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வரவிருக்கும் ஐந்து வருட காலம், தமிழ் மக்களின் எதிர்காலம், அதனை எவ்வாறு கையாள்வது மற்றும் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் காலத்தில் எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்படாது தமிழ் தலைமைகளினால் தொடர்ச்சியாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அனைத்தையுமே நீர்த்துப் போகச் செய்யப்பட்டமை உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் இன்றைய தினம் பேசப்பட்டது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் இருக்கக் கூடிய பிரச்சினைகள், தமிழ் மக்களது எதிர்கால அரசியல், பாதுகாப்பு, போரால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய அபிவிருத்திப் பணிகள் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இங்கு கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களின் கருத்தின் படி, தமிழ் மக்கள் ஒரு தனிநாட்டுக்காக போராடிய இனம். இன்றைக்கு வாழ்வாதாரத்திற்காக போராட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

புதிய ஜனாதிபதி அவர்களை தேர்தலுக்கு பிற்பாடு சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தடவை முயற்சி எடுத்தது. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இராஜதந்திர மட்டங்களுடனும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். புதிய அரசாங்கத்தை சந்திப்பதற்காக மேற்கொண்ட அந்த முயற்சிகளும் கைகூடவில்லை.

ஆகவே, எதிர்வருகின்ற 5 ஆண்டுகள் காலம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு உட்பட ஏனைய விடயங்களை கையாள்வதற்கு நாங்கள் ஒரு மாற்று வழியை கையாள வேண்டியவர்களாகவுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர தோல்வி காரணமாக நாங்கள் மாற்று வழியை கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான விடயம் தொடர்பில் பகிர்ந்துக் கொண்டோம். தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவை என்பதை இங்கு வந்தவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆகவே, அதை நோக்கி செல்வதன் ஊடாகத்தான் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுடைய சகல விதமான பிரச்சினைகளையும் அரசாங்கத்துடனும், இராஜதந்திரிகளுடனும் பேசி கையாளக் கூடிய நிலைமை ஏற்படும்.

இன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமை செயலிழந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு பதிய அரசியல் தலைமை தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Latest Offers

loading...