அரசியல் பழிவாங்கல் வேண்டவே வேண்டாம்! கோட்டாபய அரசிடம் ராஜித வலியுறுத்தல்

Report Print Rakesh in அரசியல்

கோட்டாபய அரசின் அரசியல் பழிவாங்கலின் முதல் இலக்கு சம்பிக்க ரணவக்க. அடுத்த இலக்கு நானே என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எமது ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனவே, இந்தக் கேவலமான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என்று கோட்டாபய அரசிடம் நான் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ளைவான் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகாக என்னைக் கைதுசெய்து சிறையில் அடைக்க கோட்டாபய அரசு திட்டம் தீட்டியுள்ளது. அதனால்தான் நீதிமன்றத்தில் நான் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்ற விதிமுறைகளுக்கேற்ப இந்த அரசு செயற்பட வேண்டும்; நீதியின் வழியில் நடக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசு தன்னைக் கைதுசெய்யக் கூடும் என நினைத்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் பிணை மனுவை மீண்டும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த மனு நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 6ஆம் திகதி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் இருவருடன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, கொலை, வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்திய விவகாரத்தில் இருவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.

கைதான இருவரும், அவர்கள் ஊடக சந்திப்பில் கூறிய விடயங்களைத் திருத்தி மீளக் கூற முற்பட்டால் வெள்ளை வானில் செல்ல நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அச்சுறுத்தியதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ராஜித, தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் பிணை மனுவை கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மறுநாள் வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன் பிணை மனுவில் பொலிஸாரால் கைதுசெய்யப்படவுள்ள குற்றம் தொடர்பில் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படவில்லை. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நீதிவான் குறிப்பிட்டு மனுவை நிராகரித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெள்ளை வான் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புத் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த அடிப்படையில் தன்னைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தயாராகி வருவதாக மனுதாரரான ராஜித குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார முன்னிலையாகி ஒன்றரை மணிநேரம் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இரு நபர்கள் மனுதாரரைச் சந்தித்து வெள்ளை வான் கடத்தில் தொடர்பில் தங்களுக்கு தகவல் உள்ளதாகக் கூறியுள்ளனர். உண்மைத்தன்மை தொடர்பில் முன்னாள் அமைச்சர் அறிந்திருக்கவில்லை.

அவர்களின் கூற்றில் ஏதும் உண்மையிருக்கலாம் என்ற காரணத்தால் ஊடகவியலாளர் சந்திப்பை அவர் நடத்தினார். இவர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் என்பதை முன்னாள் அமைச்சர் அறிந்திருக்கவில்லை.

தங்களுக்குப் பணம் தந்து இவ்வாறு பேச வைத்தாக இருவரும் கூறியுள்ளனர். இவர்களுடைய வாக்குமூலத்துக்கு அமைவாக மனுதாரரைக் கைதுசெய்யத் தயாராகுவதாகத் தெரியவந்துள்ளது. அவருக்கு முன் பிணை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.

எந்தச் சரத்துக்கு அமைவாக முன்பிணை கோரப்படுகின்றது என்பது முன்பிணை வழங்குவதில் முக்கியமானது என்று குறிப்பிட்ட நீதிவான், எதிர்பார்க்கும் முன் பிணை எந்தத் தவறு தொடர்பில் கோரப்படுகின்றது என்று தெளிவுபடுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். அதற்கு அமைவாக கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்பிணை மனுவை நிராகரித்தார்.

இதன்பின்னர், ராஜித சேனாரத்ன மீண்டும் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவே நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.