கடத்தல் கப்பங்களில் ஈடுபட்டதுடன் சிறுபிள்ளைகளையும் கடத்தியவர்! கருணாவை கடுமையாக சாடும் எம்.பி

Report Print Varunan in அரசியல்

கடத்தல் கப்பங்களில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கருணா அம்பாறை மாவட்டத்திற்கு வருவதன் நோக்கமென்ன? அதற்கான காரணம் என்ன? தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காகத் தான் இங்கே களமிறங்கியிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள், நான் அவருக்கு அமைச்சர் பதவியை எடுத்து கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

அவருடைய மாவட்டத்தில் இருக்கின்ற வியாழேந்திரனுக்கு முதலில் அமைச்சர் பதவி எடுத்து கொடுக்கட்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு அமைச்சுப்பதவி எடுத்துக்கொடுக்க வக்கற்றவர் விநாயகமூர்த்தி முரளிதரன்.

இங்கு அம்பாறை மாவட்டத்தில் வந்து அமைச்சுப்பதவி எடுத்து கொடுக்க போகின்றாரா?.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சுப் பதவியிலிருந்து கருணா ஒருபோதும் அம்பாறை மாவட்டத்திற்கு வந்ததும் இல்லை, அம்பாறை மாவட்டத்தில் எந்தவித அபிவிருத்தி வேலைகளை செய்ததும் இல்லை, யாருக்கும் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்ததும் இல்லை.

இப்போது நீலிக்கண்ணீர் வடித்து உள்நுழைகின்ற வேலைப்பாட்டை செய்து வருகின்றார். முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து புனர்வாழ்வு பெற்றுக்கொடுத்து உதவியளிக்க போவதாக கூறியிருந்தார்.

தான் அமைச்சுப் பதவியில் இருக்கும் போதும் முன்னாள் போராளிகள் தவிக்கவிட்டவர் கருணா. கடத்தல் கப்பங்களில் ஈடுபட்டவர்.

எங்களது பிள்ளைகளை கடத்திப் வற்புறுத்தல் செய்தவர். போராட்டங்களில் நடத்துவதற்காக சிறு பிள்ளைகளை கடத்திச் சென்றவர்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் எமது இளைஞர்களை, யுவதிகளை மாற்றப்போகுகின்றாரா? கொலைகாரனுக்கும், கொள்ளைக்காரனுக்கும் இரவிலே பாட்டும், நடனமும் பகலில் கூத்தும், கும்மாளமும் அடிக்கின்றவர் எங்களது அம்பாறை மாவட்டத்தை பாதுகாக்கப் போகிறாரா?

முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்கட்டும், அதன் பின் அம்பாறை மாவட்டதிற்கு வரட்டும். அம்பாறை மக்கள் தமிழிலும், தமிழ் தேசியத்திலும் பற்றுறுதி கொண்டவர்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் ஒன்றாக வாக்களித்து இரண்டு பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.