இலங்கையில் மீண்டும் காட்டாட்சி! - ரணில்

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நல்லாட்சியே நீடித்தது எனவும் அந்த ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச அணியினர் வெற்றியடைந்ததை அடுத்து மீண்டும் இங்கு காட்டாட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் காட்டாட்சிக்கு முடிவு கட்டப்படும் எனவும், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மலரும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச அணியினரின் ஆட்சி பழைய பாணியில்தான் செல்கின்றது. அதில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை முதலிடம் பிடித்துள்ளது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமை சட்ட விரோதமான செயற்பாடாகும். நாடாளுமன்ற விதிமுறைகளை மீறியே அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க ராஜபக்ச அரசு சதித்திட்டம் தீட்டுகின்றது. என்னையும் சிறையில் அடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ராஜபக்ச அரசின் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதற்குத் தக்க பாடம் புகட்டப்படும்.

இந்த அரசு எம்முடன் மட்டுமல்ல வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் முட்டி மோதுகின்றது. இதனால் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இந்த அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றியடைந்து எல்லாவற்றுக்கும் முடிவு கட்டுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.