கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தராவிட்டால் போராட்டங்களை முன்னெடுப்போம்!

Report Print Varunan in அரசியல்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி தராவிட்டால் அம்பாறையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நண்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் அடிப்படைத் தேவையாக தமிழ் பகுதிகளில் மூன்று பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் அவசியம் இருக்கின்றது.

புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்க வேண்டிய கடமைபாடுகளில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தில் கோமதியை மையமாகக்கொண்டு ஒரு பிரதேச செயலகமும், சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தையை அடிப்படையாகக் கொண்ட பிரதேச செயலகங்களும் உருவாக்கப்பட வேண்டிய அவசியப்பாடு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகிறது.

இதற்கு காரணம் எங்களது நிலம் ஆக்கிரமிக்கப்படுறது. எமது பொருளாதார வளம் சுரண்டப்படுகிறது. திட்டமிடப்பட்ட முறையில் ஏனைய சமூகங்களால் கலை, கலாசாரம் கல்வியை தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும் போது தான் தன்னிறைவு பெற்ற சமூகமாக மாற்றம் பெறும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவற்காக நாங்கள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுக்க வேண்டும் என கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

பல்வேறு அழுத்தங்களை கொடுத்தோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தரமுயர்தி தருவதாக இறுதிவரை சொல்லி சொல்லி எங்களை ஏமாற்றி விட்டது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தவர். அந்த நேரம் செய்யாத விடயத்தை,சொல்லாத விடயத்தை இன்று கூக்குரலிட்டு திரிகின்றார். இன்று மக்களை திசை திருப்புகின்ற போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers