பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் நாற்காலியா? தாமரை மொட்டா?

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி எதுவாக இருந்தாலும் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடாக இருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்ட அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் உட்பட அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி இணக்கப்பாட்டுக்கு வரலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

புதிய சின்னத்தை அறிமுகப்படுத்துவதை விட தற்போது பிரபலமாக மாறியிருக்கும் தாமரை மொட்டுச் சின்னம் என்ற காரணமும், ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படுத்திக் கொண்ட ஐக்கியம் ஆகிய இரண்டு விடயங்களை கவனத்தில் கொண்டு இறுதி இணக்கப்பாட்டுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாற்காலி சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் யாப்பில் பொதுத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட வேண்டும் என 17 கட்சி இணைந்து முன்னணி தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின், கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டுமாயின் கூட்டணியின் அனைத்து கட்சியின் ஆதரவுடன் நற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.