மாற்று அணியின் பிரவேசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கும்: சித்தார்த்தன் எம்.பி

Report Print Theesan in அரசியல்

கடந்த காலங்களை போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளவான ஆசனங்களை பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மாற்று அணியின் பிரவேசம் கூட்டமைப்பை பாதிக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்தியகுழு கூடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல், அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் அடுத்துவரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப் போகின்றோம் என என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாடே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

சில வேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.

எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடும். அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.

மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதிக்க செய்யும். போட்டிகள் கூடும் போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும்.

அது தொடர்பில் நாங்கள் பேசுகின்ற போது கூடிய வரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்ட வேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கின்றது.

அது எவ்வளவு சாத்தியமென்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அந்த பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது.

அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.

எனினும் எங்கள் கட்சியை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும் என்றே நம்புகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும்.

கடந்த காலங்களைப்போல் 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.

தற்போதுள்ள கள நிலவரங்கள் எப்படி சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.