கோட்டாபய தலைமையில் இராணுவத்தின் ஆட்சியா? சரவணபவன் எம்.பி கேள்வி

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் தற்போதைய நிலவரங்களைப் பார்த்தால் இராணுவ ஆட்சி நிகழ்ந்துவிடுமோ என எண்ணத் தோன்றுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பருத்தித்துறை, மாலுசந்தி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் நேற்று மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

அதிகார சபைகள், திணைக்களங்களின் தலைவர்கள், கோட்டாபயவின் வெளிவிவகார செயலாளர் என ஆறு அதிகார பீடங்களுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இது இராணுவ ஆட்சியா என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப சர்வாதிகாரம் தேவையாக உள்ளது என்று தற்போது எதிர்பார்க்கின்றனர். அபிவிருத்தி அடைந்தால் இனப்பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்தக் கருத்துக்கள் தவறானவை.

தற்போதைய ஜனாதிபதி 'தீர்வு தரவேமாட்டேன்' என்று தெரிவித்துவிட்டார். அவருக்கு அரசியல் அரிவரி தெரியாது. 70 வருடங்களாக தமிழ் மக்கள் வெறும் அபிவிருத்தியை மட்டும் கோரி போராடி வரவில்லை. எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை.

சர்வதேசத்துக்கு இந்த அரசால் பல உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றில் எவையும் நிறைவேற்றப்படாமல் தூக்கி எறியப்படப்போகின்றன. எமக்குத் தீர்வொன்று கிடைக்க வேண்டும்.

முக்கியமாக இந்தியாவின் பங்குதான் இதில் அர்த்தமுள்ளதாக இருக்கும். தீர்வை அடியோடு மறுப்பதன்மூலம் கோட்டாபய இனப் பிரச்சினைக்கான தீர்வை தானாகவே சர்வதேசத்தின் பிடியில் கொடுக்கப் போகின்றார்.

குடியேற்றத் திட்டங்கள் மூலம் கிழக்கில் தமிழ் மக்கள் எவ்வாறு சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்களோ அவ்வாறே வடக்கிலும் நிகழ வேண்டும் என்ற முனைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்தச் சதியை முறியடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.