புலம்பெயர் நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பணம்! கருணா கூறும் தகவல்கள்

Report Print Kumar in அரசியல்

புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் காலத்தில் பல முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த முதலீடுகள் அங்கு தற்போது பதுக்கப்பட்டுள்ளது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து செயற்படும் சமூக சேவை அமைப்பான நீரோ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததன் பின்னர் நாங்கள் கிராமம் கிராமமாக சென்று அரசியல் தெளிவூட்டல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏனென்றால் நாங்கள் முப்பது வருடகாலமாக யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக எங்களுக்கு அரசியல் உரிமையை பாதுகாக்கத் தெரியவில்லை.அதில் தவறிழைத்துவருகின்றோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் அதற்கு ஒரு உதாரணமாகும்.

நிச்சயமாக கோட்டாபய ராஜபக்சதான் வெல்வார் என்பது அனைவருக்கும் தெரியும். சஜித்திற்குப் பின்னால் நின்றவர்கள் இனத்துவேஷம் பேசுகின்ற முஸ்லிம் தலைவர்களாவர்.

அவர்களால்தான் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றன. அவ்வாறிருந்தும் தமிழர்கள் சஜித்திற்கே வாக்குகளை அளித்தனர். அன்னச் சின்னத்திற்கே புள்ளடிகளை இட்டனர்.

மட்டக்களப்பில் கோட்டாபயவிற்கு முப்பத்து ஆறாயிரம் வாக்குகளே கிடைத்தன. மூன்று இலட்சத்து எண்பத்தாறாயிரம் வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பில் ஒரு இலட்சம் வாக்குகள் கோட்டாபயவிற்கு கிடைத்திருந்தாலும் நாம் இங்கு பலமானதொரு சக்தியாக இருந்திருப்போம்.

ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்த நாட்டில் முஸ்லிம்களின் வாக்குகளோ தமிழர்களின் வாக்குகளோ தேவையில்லை, சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் போதும் என்பதற்கு உதாரணமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார்.

கோட்டாபய அவர்களுக்கு வாக்களித்ததன் மூலம் சிங்கள மக்கள் தமிழர்களை காப்பாற்றிவிட்டனர். சஜித் ஜனாதிபதியாக வந்திருந்தால் இங்கிருக்கின்ற தேவாலயங்களிலெல்லாம் குண்டுகளே வெடித்திருக்கும். அதற்காக சிங்கள மக்களை பாராட்ட வேண்டும்.

வருகின்ற பத்து ஆண்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச அவர்களே ஜனாதிபதியாக இருப்பார். அவரை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் சித்திரை மாதம் வரவிருக்கின்ற தேர்தலை திட்டமிட்டு சிறந்த முறையில் எதிர்கொள்ள வேண்டும்.

நாங்கள் எல்லோரும் சேர்ந்து எமது மக்களை காப்பாற்றக்கூடிய வளத்தினை பெருக்கக்கூடிய சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அதுவே எங்கள் நோக்கமாகும்.

இன்று எத்தனையோ இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி இருக்கின்றனர், வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் நாடாளுமன்றமாகும்.

பகட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோமானால் அவர்களால் எந்தவித பயனும் இருக்கப்போவதில்லை.

நாங்கள் அமைச்சர்களாக இருந்தபோது 3500 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினோம். குளங்கள், பாதைகளை அமைத்தோம். எத்தனையோ அபிவிருத்திகளை செய்தோம்.

வைத்தியசாலைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கினோம். இதற்காக நாங்கள் பணம் எதனையும் பெறவில்லை. நேர்மையான முறையில் வேலை செய்தோம். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட வறுமையின் கொடுமையால் நிறைய பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தூக்கிட்டு தற்கொலை செய்தோரின் வீதம் அதிகமாகும். மட்டக்களப்பில் மாத்திரம் நுண்கடன் தொல்லை காரணமாக 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாங்கள் மீள்வதற்கு வரவிருக்கின்ற தேர்தலை சிறந்தவொரு களமாக நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

எமது மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டும். சிங்கள மக்கள் 88 சதவீதம் வாக்களித்திருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் 98 சதவீதம் வாக்களிக்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் வாக்களிப்பது 60 வீதத்தை தாண்டுவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீதம் முஸ்லிம்களும் 75 வீதம் தமிழர்களும் இருக்கின்ற நிலையில் 25 வீத முஸ்லிம்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். 75 வீத தமிழர்களுக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். இதுவே வழமையாக நடைபெறுகின்றது. இதனை நாங்கள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழர்களுக்காக குரல்கொடுத்து தமிழ் சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நான் விட்டெறிந்துவிட்டு வந்தேன். முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதை விரும்பாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையினையும் நிராகரித்தேன்.

அந்தவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு நான் வெளிப்படையாகவே அறிவித்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தேர்தல் காலத்தில் எனது வீட்டுக்கு வந்து எனது ஆதரவினை கோரியபோது நான் ஆதரவினை வழங்கியிருந்தேன்.

அன்று ஐக்கிய தேசிய கட்சியில் கணேசமூர்த்தி போட்டியிட்டு அமீர் அலியை நாடாளுமன்றம் அனுப்பினார், பிள்ளையான் தேர்தலில் போட்டியிட்டு ஹிஸ்புல்லாவினை நாடாளுமன்றம் அனுப்பினார். இதுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது.

எதிர்வரும் தேர்தலில் அந்த தவறை நாங்கள் விடக்கூடாது. தனித்துவமாக நின்று உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். அதுதான் எமது நோக்கமாகும்.

புலம்பெயர் மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். நாங்கள் இன்று களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றோம். புலம்பெயர்ந்த மக்கள் இன்று பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் இங்குள்ள சமூக சேவைகள் அமைப்புகளுக்கு உதவ முன்வரவேண்டும். அவ்வாறு உதவுவார்களானால் இங்குள்ள பல பிரச்சினைகளை தீர்க்க முடியும். நாங்கள் அரசாங்கத்தினை நம்பவேண்டிய அவசியம் இல்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நாங்கள் இருந்தபோது அந்த இயக்கத்தினால் ஏராளமான முதலீடுகள் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த முதலீகள் இன்று அங்கு பதுக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள பணம் இங்கு வந்தாலேபோதும் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. அதில் ஒரு 30 வீதத்தையாவது தருவார்களானால் இங்குள்ள மக்களுக்கு நிறைய உதவிகளை செய்யமுடியும். புலம்பெயர் மக்கள் அதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார்.