வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

Report Print Theesan in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு சபை மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 12ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தொடரில் சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இன்றையதினம் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பின் போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 09 உறுப்பினர்களும், எதிராக 13உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதேவேளை நான்கு உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த முறை இடம்பெற்ற அமர்வின் போது வாக்கெடுப்பில் நடுநிலை வகித்திருந்த உபதவிசாளர் இன்றைய வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதோடு ஐக்கிய தேசி கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆதரவாக வாக்களித்ததுடன் மற்றைய இருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை ஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த அமர்வின் முதல் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களித்தமை குறிப்படத்தக்கது.

Latest Offers

loading...