தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் வென்றெடுக்க வேண்டும்! வாசுதேவ நாணயக்கார

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் மக்களிடம் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் மத்திய அரசு செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“யாழ். பல்கலைக்கழகத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்கள் ஒருவிதமான தமிழ் ஆட்சி நிர்வாகத்தையே கேட்கின்றார்கள். அவர்கள் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கேட்கவில்லை.

நிர்வாக அதிகாரத்தைக் கேட்கின்றார்கள். நாம் அதனை வழங்க மாட்டோம். நாம் சிங்கள நிர்வாக அதிகாரத்தை வழங்க மாட்டோம், முஸ்லிம் நிர்வாக அதிகாரத்தை வழங்க மாட்டோம்.

தமிழ் நிர்வாக அதிகாரத்தை வழங்கவும் விரும்பவில்லை. நாம் ஐக்கிய இலங்கைக்குள் மாகாண சபைகள் மூலம் நிர்வாக அதிகாரத்தை முடிந்தளவு வழங்குவோம்.

நாம் வடக்கைப் பற்றி எண்ணத் தேவையில்லை. நாம் இலங்கையைப் பற்றியே எண்ண வேண்டும். இலங்கையை ஒரே இலங்கையாக வைத்திருப்பதற்கு சிந்திக்க வேண்டும்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கு இலங்கையை பிரிக்க வேண்டும், அதன் மூலம் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்பதுதான் எண்ணம். ஏகாதிபத்தியமே எமது முக்கிய எதிரியானால் அவர்களின் உபாயங்களுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

அவர்களின் தேவை பிரிப்பது என்றால் எமது தேவை ஐக்கியமாக இருக்க வேண்டும். அதற்கான பாதை தமிழ் மக்களின் நம்பிக்கையை மத்திய அரசாங்கம் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டும்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நலலிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தத் தொடங்க வேண்டும்.

சிங்களவர்களுக்கு தமிழ்மொழியை கற்பிக்க வேண்டும். தமிழர்களுக்கு சிங்களத்தைக் கற்பிக்க வேண்டும். ஒருவர் கூறுவது மற்றவருக்குப் புரிய வேண்டும்.” என கூறியுள்ளார்.