2019இல் உலகம்! மாற்றங்களும், தாக்கங்களும்

Report Print Sujitha Sri in அரசியல்

ஒரு வருடத்தின் முடிவில் நிற்கிறோம். அடுத்த வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு நாளே எஞ்சியிருக்கின்றது. கடந்து சென்ற 12 மாதங்களில் நிகழ்ந்தவை என்ன என்பதைத் திரும்பிப் பார்க்க உசிதமான தருணம் என கட்டுரையாளர் சதீஸ் கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும்,

இந்த மீள்பார்வை அடுத்த வருடத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமையும். 2019ஆம் ஆண்டு போராட்டங்களின் வருடம் எனலாம். கிழக்கில் சிலி தொடக்கம் மேற்கில் ஹொங்கொங் வரையில் பெரும் போராட்டங்கள். இவை ஆட்சி பீடங்களுக்கு சவால் விடுப்பவையாக இருந்தன.

சூடான், அல்ஜீரியா, பொலிவியா ஆகிய நாடுகளில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த தலைவர்கள் வெளியேறினார்கள். ஈரான், இந்தியா, ஹொங்கொங் போன்றவற்றில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் அடுத்தாண்டும் தொடரக்கூடிய நிலை தென்பட்டது.

லெபனான் ஆர்ப்பாட்டம் முக்கியமானது. இங்கு பல தசாப்த காலம் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி. இதன் காரணமாக சனத்தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

பிராந்திய அரசியல் காரணமாக ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்த தேசத்தில் அரச இயந்திரங்களில் மலிந்து நின்ற ஊழல் மோசடிகள் வட்ஸ்அப் அழைப்புகளுக்கு வரி அறவிடுதல் மூலம் வருமானம் ஈட்ட அரசாங்கம் முனைந்த சமயம் மக்களின் ஆத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளிப்பட்டது எனலாம். பிரதமர் சாத் ஹரீரி பதவி விலகினார். ஆர்ப்பாட்டங்கள் ஓயவில்லை.

சிலி என்ற தென் அமெரிக்க தேசத்திலும் அதே நிலை தான். கடந்த ஒக்டோபர் மாதம் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து மக்கள் வீதிகளில் இறங்கினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பிற்கு எதிரான மக்கள் சக்தியாகப் பரிணமித்து வன்முறைகளுக்கும் தூபமிட்டது. இதன் விளைவாக 26 பேர் வரை பலியானார்கள்.

ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒரே தேசம் இரு ஆட்சி நிர்வாக முறைகள் என்ற கோட்பாட்டின் கீழ், சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியம் ஹொங்கொங்வாசிகளில் பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்டமைப்பின் கீழ் சுய நிர்ணய உரிமையுடன் வாழ விரும்புபவர்கள்.

ஹொங்கொங் பிராந்தியத்தில் தவறிழைத்தவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு விசாரிக்க வழிவகுக்கும் சட்டமூலத்தை ஆட்சேபித்து கடந்த ஜுன் மாதம் மக்கள் வீதிகளில் இறங்கினார்கள்.

சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டது. வீதிகளில் இறங்கிய மக்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் வாக்குரிமை வேண்டும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அவற்றில் அடங்கும்.

பொலிவியாவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் சிக்கலானது. அங்கு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஈவோ மொராலெஸ் வெற்றி பெற்று, நான்காவது தடவையாகவும் ஆட்சி பீடத்திற்கு தெரிவாகியிருந்தார்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி பெறுபேறுகளைப் புறக்கணித்து தாமே இடைக்கால ஜனாதிபதியென சுய பிரகடனம் செய்து கொண்டார்.

இந்த அரசியல் பிரச்சினை பொருளாதார நெருக்கடிகளுக்குத் தூபமிட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற வழிவகுத்தது. மக்கள் வன்முறைகளில் ஈடுபட்ட சமயம் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவாக செயற்படும் பாதுகாப்புப் படைகள் பார்த்துக் கொண்டிருந்தன.

ஈவோ மொராலெஸ் மெக்ஸிக்கோவிற்குத் தப்பிச் சென்று அரசியல் புகலிடம் கோரினார். பொலிவியாவில் நடந்தது மக்கள் புரட்சியென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட இது அமெரிக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சியென ஈவோ மொராலெஸ் சாடினார்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஈக்குவடோரில் இருவார காலம் நீடித்த ஆர்ப்பாட்டங்களால் அந்நாடு முடங்கிப் போயிருந்தது. கொலம்பியாவிலும் வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சேபித்து கடந்த நவம்பர் நடுப்பகுதி தொடக்கம் பொது வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

அல்ஜீரியாவில் கடந்த இருவருட வருடகாலமாக பதவியிருந்து கொண்டு ஐந்தாவது தடவையாகவும் ஆட்சிபீடத்தைக் கைப்பற்ற முனைந்த ஜனாதிபதி அப்துல் அஸீஸ் பௌத்பிலிக்காவிற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இராணுவத்தின் ஆதரவை இழந்த அல்ஜீரியா ஜனாதிபதி ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அங்குள்ள ஒட்டு மொத்த அரசியல் கட்டமைப்பையும் மாற்றுமாறு கோரி மக்கள் வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 12ஆம் திகதி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை மக்கள் நிராகரிக்கிறார்கள்.

இவ்வாண்டு முற்பகுதியில் சூடானிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. நான்கு மாதங்கள் நீடித்த மக்கள் போராட்டத்தை அடுத்து ஜனாதிபதி ஓமர் அல்பஷாரின் மூன்று தசாப்தகால ஆட்சிக்கு இராணுவம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஈராக்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. தமது சமூகத்தில் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் தாண்டவமாடுகையில் ஆட்சியாளர்கள் என்பது மக்கள் ஆதங்கமாக இருந்தது.

பொருளாதார நெருக்கடிகளை ஆட்சேபித்து கோபத்தை வெளிப்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள் பெரும் மக்கள் இயக்கமாக பரிணமித்தன. இதன் காரணமாக கடந்த டிசம்பர் முதலாம் திகதி அரசாங்கம் பதவி விலகியது.

இந்தியாவை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டமூலம் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது.

அரசியல் யாப்பின் மூலம் மதச் சார்பின்மை தேசமாகப் பிரகடனம் செய்யப்பட்ட இந்தியா அயலிலுள்ள முஸ்லிம் நாடுகளில் அடக்குமுறைக்கு உட்பட்டு மீண்டும் இந்தியாவை நாடிய முஸ்லிம் அல்லாதவருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம், இது முஸ்லிம்களைப் புறக்கணித்து இந்திய சமூகத்தை மதரீதியாக பிளவுப்படுத்துகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் வாதிடுகிறார்கள்.

சட்டத்தை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் தரப்பில் இதுவரை பதில் இல்லை. அரசியல் அரங்கை ஆராய்ந்தால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல வழிவகுக்கும், பிரெக்ஸிட் நடைமுறை முக்கிய இடத்தை பெற்றிருந்தது.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம் கடந்த மார்ச் 29ஆம் திகதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

ஆனால் பிரதமர் தெரேசா மே அம்மையாரும் அவரைத் தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்ட பொரிஸ் ஜொன்சனும் விலகிச் செல்லுதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் எட்டிய உடன்பாடுகளுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் அங்கீகாரம் அளிக்கவில்லை.

கடந்த 12ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் பொரிஸ் ஜொன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிடைத்த வெற்றி அவரது பிரெக்ஸிட் நடைமுறைக்கான அங்கீகாரமாகக் கருதப்பட்டது.

இதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு இறுதி அங்கீகாரம் பெற்று 31ஆம் திகதி பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகச் செய்வது அவரது நோக்கம்.

அடுத்ததாக டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை!

2020ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நினைக்கும் டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதான போட்டியாளராகத் திகழக்கூடிய ஜோ பைடனின் நற்பெயருக்கு முறையற்ற விதத்தில் களங்கம் விளைவிக்க முனைந்தார் என்பது குற்றச்சாட்டு.

ஜோ பைடனை விசாரிக்குமாறு யுக்ரைன் மீது அழுத்தம் கொடுத்ததன் மூலம் தமது பதவிக்குரிய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்பதன் அடிப்படையில் ட்ரம்பிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பிரேரணை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் ட்ரம்ப்பை பதவிநீக்கம் செய்ய வேண்டுமானால் அரசியல் குற்றவியல் பிரேரணை செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற வேண்டும்.

செனட்டில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை பலம் உள்ளதால் அங்கு அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை.

எனினும் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை மீண்டும் தெரிவு செய்ய வேண்டுமா என்பதை அமெரிக்க மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றியீட்டிருந்தது.

இந்த வெற்றிக்கு அர்த்தம் கற்பிப்பது சிரமமான காரியமாக இருந்த போதிலும் இதை இந்திய தேசத்தில் கடும்போக்கு இந்துதுவ கோட்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்ப்பவர்கள் அதிகம்.

இந்த பார்வைக் கோணம் சரியானது என்பதை நிரூபிக்கும் வகையில் நரேந்திர மோடியின் அரசாங்கம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட விசேட அந்தஸ்தை நீக்கியிருந்தது. ஜம்மு - காஷ்மீரை இரு கூறுகளாக்கி யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.

இந்தியாவின் தேச நலன்களைக் கருதி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக மோடியின் அரசாங்கம் நியாயம் கூறினாலும் இது தமது சுயநிர்ணய போராட்டத்தை முடக்கும் திட்டமிட்ட சதியென காஷ்மீர் மக்கள் வாதிடுகிறார்கள்.

பிராந்திய அரசியல் நெருக்கடிகளை ஆராய்ந்தால், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்திருந்தது.

உலகின் பலம் பொருந்திய நாடுக்ள இணைந்து 2015இல் உருவாக்கிய அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தது. அத்துடன் நில்லாமல் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்திருந்தது.

இதன் விளைவுகள் ஹோர்முஸ் நீரிணையிலும் சவூதி அரேபிய மண்ணியும் எதிரொலித்தன. உலகில் ஆகக்கூடுதலான எரிபொருட்கள் கப்பல்களில் ஏற்றிச் செல்லும் கடற்பாதையான ஹோர்முஸ் நீரிணை.

அங்கு எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் தாக்கப்பட்டு உலகம் முழுவதிற்குமான எரிபொருள் விநியோகம் முடங்கக்கூடிய நிலை கடந்த ஜுலை மாதம் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பென்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக ஈடுபட்டார்.

அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து தாம் தன்னிச்சையாக வெளியேறியதால் ஏற்பட்ட அவப்பெயரை கலைவதற்கு ஈரானை வில்லனாக சித்தரிக்கும் முயற்சியே அது. சவுதி அரேபியாவிலுள்ள எண்ணெய் குதங்கள் தாக்கப்பட்ட சமயம் அதனை ஈரானே தாக்கியது என்று டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக குற்றம்சாட்டியதையும் கூறலாம்.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதராம் அற்றவை என்பது காலப்போக்கில் தெரியவருவது வழக்கம். இது 2020இல் மென்மேலும் உறுதியாகக்கூடும்.

ட்ரம்ப் இன்னொரு வேலையையும் செய்தார். கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி சிரியாவின் வடபகுதி துருக்கியுடனான பொது எல்லை அமைந்துள்ள பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெற்றார்.

இதனை தொடர்ந்து துருக்கிய படைகள் எல்லை தாண்டி பிரவேசித்தன. துருக்கி அரசாங்கம் பயங்கரவாதிகளாக கருதும் குர்திஸ் போராளிகளை விரட்டியடிப்பது ஊடுறுவலின் நோக்கம்.

சிரியாவின் வட பகுதியில் குர்திஸ் இனத்தவர்கள் சுயாட்சி உள்ள மாநிலமொன்றை அமைத்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு அமெரிக்கா உதவிய போதிலும் தற்போதைய தருணத்தில் நிலவும் பூகோள அரசியல் நிலைமைகள் காரணமாக துருக்கியின் ஆதரவு முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

அதீத சுயநலம் காரணமாக தம்மை நம்பிய குர்திஸ் மக்களை கைவிட்டு துருக்கிய ஜனாதிபதியின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக குர்திஸ் மக்களை விரட்டியடிக்க வழிவகுத்தார் ட்ரம்ப். ரஷ்யாவின் தலையீட்டைத் தொடர்ந்து துருக்கியப் படைகள் சரியாவின் வட பகுதியில் இருந்து வெளியேறியிருந்தன.

வர்த்தக உலகிலும் அமெரிக்க சுயநலக் கோட்பாட்டை அனுசரித்தது ட்ரம்பின் “அமெரிக்க ஃபர்ஸ்ட்” என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி சீனாவுடன் மாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றியத்துடனும் வர்த்தகப் போர்களை ட்ரம்ப் முன்னிறுத்தினார்.

2019இல் நிகழ்ந்த முக்கியமான அரசியல் சந்திப்பாக அமெரிக்க ஜனாதிபதிக்கும், வட கொரியத் தலைவருக்கும் இடையில் கடந்த பெப்ரவரியிலும், ஜுனிலும் நிகழ்ந்த சந்திப்புக்களைக் குறிப்பிட முடியும்.

இந்த சந்திப்புக்கள் இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டாண்டு காலம் நீடிக்கும் பகையை முடிவிற்கு கொண்டு வரக்கூடிய பின்புலத்தை உருவாக்கக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய போதிலும் அது சாத்தியப்படவில்லை.

அடுத்த கட்ட சமாதான நகர்வுகளில் இரு நாடுகளும் அக்கறை காட்டவில்லை. பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதில் ஆர்வத்துடன் இருப்பதாக கடந்த செப்டெம்பர் மாதம் வடகொரிய அறிவித்தது. அதற்கு அமெரிக்காவிடம் இருந்து சரியான பதில் வழங்கப்படவில்லை.

சர்வதேச அளவில் பல விடயங்களால் மூக்குடைப்பட்டு நின்ற ட்ரம்பிற்கு கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி ஐ.எஸ் இயக்கம் தொடர்பில் வெற்றிப் பிரகடனம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது.

அன்றைய தினம் ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டதாக அறிவித்தார். படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அல்பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக ட்ரம்ப குறிப்பிட்டார்.

இஸ்லாமிய கடும்போக்குத் தீவிரவாதம் என்று மேற்குலகம் வர்ணிக்கும் போக்கிற்கு எதிராக தீவிர வலதுசாரி சிந்தனை எந்தளவு தீவிரமாக மேலைத்தேய சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது என்பதை கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல் எடுத்துக் காட்டியது.

வெள்ளையின மேலாதிக்க சிந்தனையால் உந்தப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜை ப்ரென்டன் டரன்ட் என்பவர் துப்பாக்கிகளைக் கையிலேந்தி இரு பள்ளிவாசல்களுக்குப் பிரவேசித்து ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.

தமது கொடுஞ்செயலை பேஸ்புக்கில் நேரடியாக மற்றவர்கள் காணும்படி செய்தார். இதில் 51 பேர் பலியானார்கள், 40 பேர் வரை காயமடைந்தார்கள். இந்தத் தாக்குதலின் பின்விளைவுகளை நியூஸிலாந்தின் இளம் பிரதமர் ஜெசித்தா ஆர்டென் அம்மையார் எதிர்கொண்ட விதம் ஒட்டுமொத்த உலகிற்கும் மனித நேயத்தைப் போதித்தது.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்களது குடும்பத்தவர்களை அரவணைத்து ஜெசிந்தா அம்மையார் ஆறுதல் சொன்ன விதத்தை ஒட்டுமொத்த உலகமும் வியந்து பார்த்தது.

2019இல் மனித நேயம் என்பதை நோக்கினால் தமிழ் நாட்டின் நடுக்காட்டுப்பட்டியிலுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்ற சிறுவனுக்காக உலக மக்கள் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்த விதத்தை மறக்க முடியாது.

பிரார்த்தனைகள் பலனற்றுப் போனதால் பச்சிளம் பாலகன் சடலமாக மீட்கப்பட்ட காட்சியை எவரும் இலகுவில் மறந்து விட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.