ரணிலின் வரப்பிரசாதங்களுடன் வாழ்ந்த சம்பந்தனுக்கு கொழும்பில் ஏற்பட்ட புதிய நெருக்கடி

Report Print Sujitha Sri in அரசியல்

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று நவம்பர் 18ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார்.

இதனையடுத்து தொடர்ச்சியாக அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறான நிலையில் அரச செலவுகளை குறைக்கும் வகையிலான செயற்திட்டங்களும் இதில் அடங்குகின்றன.

இவ்வாறான நிலையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் கொழும்பு - 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள பி 12 இல் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லம் பக்கம் அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை சம்பந்தனால் அந்த இல்லத்தை பயன்படுத்துவதற்கான அனுமதி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது.

ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குறித்த குடியிருப்பின் பராமரிப்பிற்காக ஐந்து தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சின் மூலம் பணம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி கடந்த 2017ஆம் ஆண்டு குறித்த கட்டடத்தை புதுப்பிப்பதற்கு சுமார் 35 மில்லியன் ரூபாய் செலவிப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் வேண்டுகோளின் பேரில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, KX 2330 மற்றும் KO 6339 வாகனங்கள் மற்றும் 600 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை ஒதுக்கவும் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வசித்துவரும் இல்லம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் மீது தற்போதைய அரசாங்கத்தின் கவனம் எப்போது திரும்பும் என்பது கேள்விக்குறியே.

இருந்தாலும் இது தொடர்பில் பெரும்பாலும் தமிழர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்லலாம். 2015 இல் ரணில் - மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்த போது அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டது.

ஆனால் ரணில் - மைத்திரி அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திய அளவிற்கு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை என்பது உண்மை தான்.

காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் சார்ந்தவர்களுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டதே தவிர தமிழ் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எந்தவொரு உதவியையும் அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை.

மாறாக ரணில் தரப்போ நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக கைதூக்கும் பாவைகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பயன்படுத்திக் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியாக இருந்த காலப்பகுதியில் அவரிடமிருந்த வரப்பிரசாதங்களை கொண்டு பதினைந்து பட்டதாரிகளை உதவி பொலிஸ் உத்தியோகத்தர்களாக்கியிருக்க முடியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்திருக்க முடியும், வடக்கு, கிழக்கிலுள்ள எத்தனையோ கிராமங்களில் எண்ணற்ற அபிவிருத்திகளை செய்திருக்க முடியும்.

ஆனால் அவர் என்ன செய்தார்? இவற்றில் ஒன்றையாவது செய்தாரா? இல்லை அதற்கான முதற்படியையாவது எடுத்து வைத்தாரா? தீர்வு கிடைக்கும் வரையில் எதையும் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றிக் கொண்டு சொகுசு வாழ்க்கையை தான் வாழ்ந்தார்கள்.

வடக்கு, கிழக்கில் அல்லல்படும் சாதாரண மக்களை போல் ஒரு நாளாவது குடிசையில் வாழ்ந்திருப்பாரா? ஒருவேளை சாப்பாட்டிற்கும், ஒரு கோப்பை குடிநீருக்கும் அல்லல்பட்டிருப்பாரா?

எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவியை வைத்துக் கொண்டு சொகுசு வாகனம், சொகுசு வீடு, சொகுசான மருத்துவமனைகளில் வைத்திய வசதிகள் என ராஜ போக வாழ்க்கை தான் வாழ்ந்து வந்துள்ளார்.

இரா.சம்பந்தன் போன்று வயதான மிகவும் உடல்நிலை சரியில்லாத எத்தனையோ தமிழ் தாய்மாரும், தந்தைமாரும் தனது உணவை தானே தேடிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் யாருக்கும் தெரியாதா?

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்ததாலேயே, இரா.சம்பந்தனுக்கு கொழும்பில் சொகுசு பங்களா வழங்கியதாக தெரிவித்துள்ளார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித பண்டார.

இந்த நிலையில் யாரை நம்புவது? யார் கூறுவது உண்மை என்பதெல்லாம் அரசியல் விளையாட்டுகளில் பார்வையாளராக இருக்கும் தமிழர்களுக்கு தெரியாது என்பதே அரசியல்வாதிகளுக்கு பலமாக காணப்படுகிறது.

சரி இதெல்லாம் அவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை என்றே வைத்துக் கொள்வோம். சிறையில் பல வருடங்களாக குடும்பங்களை, குழந்தைகளை, மனைவிமாரை, பெற்றோரை, சகோதரர்களை பிரிந்து சொல்லொண்ணா துயரில் வாடி வரும் தமிழ் அரசியல் கைதிகளை கூட கண்ணுக்கு தெரியவில்லையா?

2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதி போன்றதொரு காலம் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இனி எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டு மக்கள் மத்தியில் போலி அரசியல் பேசித் திரியும் தமிழ்த் தலைமைகள் இதனையெல்லாம் தெரிந்து தான் செய்கிறார்களா?

ரணில் என்ன சொல்கிறாரோ அதனையெல்லாம் அப்படியே நிறைவேற்றி வந்தார்கள். ஆனால் தமிழர்களை நடு ஆற்றில் கைவிட்டு விட்டார்கள். சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியும் ரணில் - மைத்திரி அரசு தான் தமிழர்களுக்கு எதையுமே செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம், ஏன் அவர்கள் வெளிநாடுகளின் உதவிகளை நாடவில்லை.

தமிழர்களுக்காக, தமிழர்களின் தீர்விற்காக, தமிழர்களின் உரிமைகளுக்காக இரா.சம்பந்தன் எத்தனை உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களை கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொண்டிருப்பார்?

அதன்மூலம் எத்தனை தமிழர்களுக்கு நன்மை செய்துள்ளார்? இது எதுவுமே நடக்கவில்லையே. இதயெல்லாம் நாம் சொல்வதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், தமிழ் தலைமைகளை உசுப்பேற்றிவிடும் அடிவருடிகள் என எத்தனை பேர் வேண்டுமானாலும் கோவம் கொள்ளலாம்.

ஆனால் இந்த எழுத்துக்கள் எறியும் கனலாய் இருக்கின்றன. அவை எமது மக்களின் ஆதங்கங்களே தவிர வேறொன்றும் இல்லை. குறைந்தபட்சம் வன்னி பிராந்தியத்தில் ரிசாட்டை எதுவும் செய்ய முடியவில்லை, கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரை வார்க்கும் போதும் அறிவுக்கண்களை திறந்து கொள்ளவில்லை.

இதையெல்லாம் தட்டிக் கேட்க திராணியற்ற கூட்டத்தினர் தான் தமிழர்களுக்கு தலைமை தாங்குகின்றார்கள் என்பதில் தமிழர்கள் வெட்கம் கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகிறது.

தேர்தல் காலங்கள் வரும் போது தமிழர்கள், தீர்வுகள், இராஜதந்திரம் போன்ற சொற்பதங்களை பயன்படுத்தி தமிழ் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு கேவலமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதில் வல்லவர்களாக மட்டுமே தமிழ்த் தலைமைகள் காணப்படுகிறார்கள்.

அதிலும் கூட்டமைப்பினர் தமிழர்களைக் கட்டிப்போடும் சொற்களில் மிகப் பிரதானமானது இராஜதந்திரம் என்பதாகும். ஆனால் கூட்டமைப்பில் இராஜதந்திரிகள் இருக்கின்றனரா?

அப்படியாயின் அவர்கள் எவ்வகை இராஜதந்திரிகள்? இராஜதந்திரிகளாக செயற்படுமளவுக்கு அவர்கள் துறைசார் சார்ந்த கற்கைகள் எதிலாவது தோற்றியிருக்கிறார்களா?

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று அதிக உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ஒரு சில வாக்குறுதிகளையும், ஜனாதிபதி தேர்தலின்போது தமிழர்களின் வாக்குகளைத் திரட்டி சிங்களத் தலைமைகளுக்குத் தாரைவார்ப்பதற்காக இன்னும் சில வாக்குறுதிகளையும் வழங்குகிறார்கள்.

இப்படி வாக்குறுதிகளை வழங்கி வழங்கி அந்த சொல்லிற்கு எந்தவொரு மதிப்பும் இல்லாத நிலையையே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எதையாவது சொன்னதை போல் செய்திருக்கிறார்களா?

வடக்கு, கிழக்கிலிருந்து அதிகளவான உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்துக்கு தமிழர்கள் அனுப்பிய போதும், ஆள்பலத்தை வைத்து ஏதாவது செய்திருக்கிறார்களா?

வெறுமனே பதவியை வைத்துக் கொண்டு பகட்டு வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டு தமிழர்களை வாக்கு போடும் பொம்மைகளாக பாவிக்கும் இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றும் பொறுப்பு தமிழர்களாகிய நம் கைகளிலேயே இருக்கிறது.

இனிமேலாவது இந்த கண்கட்டி வித்தைகளை நம்பாது நம் அறிவினை பாவித்து முடிவினை எடுத்தால் தமிழர்களின் எதிர்காலம் ஒளிமயமாக மாறும் சாத்தியம் அதிகமே!!!