19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய அவசரப்படும் அரசாங்கம்: எஸ்.எம்.மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய தற்போதைய அரசாங்கம் அவசரப்பட்டு வருவதாகவும், புதிய பயணம் பற்றி பேசிய அரசாங்கம் மீண்டும் வழமையான பழைய பாதையிலேயே பயணிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் கடந்த அரசாங்கம் நீதித்துறையை சுதந்திரமாக செயற்படும் வகையில் மாற்றியதால், அரசாங்கம் விரும்பியது போல் பழிவாங்கல்களை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு, நீதிமன்றம் மற்றும் பொலிஸ் துறைகளை தமக்கு தேவையான வகையில் கையாள அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நீதிமன்றம், பொலிஸ், அரச ஊடகங்கள், அரச கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.

எனினும், தற்போதைய அரசாங்கத்திற்கு நீதிமன்றம், பொலிஸ் மற்றும் அரச துறையை தமக்கு தேவையான கையாளும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு 19ஆவது திருத்தச் சட்டம் பெரிய தடையாக இருந்து வருகிறது. இதனால் அந்த திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் அவசரம் காட்டி வருகிறது.

அரசாங்கம் எப்படியான முயற்சிகளை மேற்கொண்டாலும் 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.