மரண தண்டனையால் பொங்கியெழும் அரச சார்பற்ற அமைப்புகள்! நிமல் சிறிபால டி சில்வா

Report Print Rakesh in அரசியல்

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், இலங்கையில் அதனை முன்னெடுக்க முற்பட்டால் அதற்கு எதிராக அரச சார்பற்ற அமைப்புகள் பொங்கியெழுகின்றன.

வெளிநாட்டு அழுத்தங்கள் குவிகின்றன. எனினும், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடாகும் என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓர் நாட்டில் ஓர் சட்டம் என்ற கோட்பாட்டை உருவாக்கும் வகையில் சட்டத்துறையில் மறுசீரமைப்பு அவசியம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். இதற்கான சட்டம் விரைவில் இயற்றப்பட வேண்டும்.

அத்துடன், இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் இன்னும் துரிதமாக இயங்க வேண்டியுள்ளது. அந்தத் திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ஹெரோயின் தொடர்பான வழக்குகள் கிடப்பில் உள்ளன.

ஹெரோயின் பாவனையாளர் யார், விற்பனையாளர் யார் என்று கண்டறிவதற்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.

ஒரு பொதி ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருப்பவர் கூட விற்பனையாளர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டே வழக்கு தொடுக்கப்படுகின்றது. அவர்களுக்கு பிணை கிடைக்காமல், விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர்.

இந்த விடயத்தில் பொலிஸார் புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயற்பட்டால், சிறைச்சாலைகளில் எழும் இடப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணலாம்.

அதேவேளை, ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக, கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 5, 6 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்படும் விற்பனையாளருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுவது நியாயமான நடவடிக்கை.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. எமது நாட்டில் மட்டும் ஏன் வழங்க முடியாது? நாம் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்த முற்பட்டவேளை, சர்வதேச அழுத்தம் ஏற்பட்டது.

தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அரச சார்பற்ற அமைப்புகள் வலியுறுத்தின.

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கினால் மட்டுமே போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.