வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு இரண்டு வார கால அவகாசம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வெளிநாடுகளில் பணியாற்றும், அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் அனைவரும் இரண்டு வார காலத்திற்குள் நாடு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்றிருந்த தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை கடந்த டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தலின் அடிப்படையில் பல தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு திரும்பியுள்ள போதும் மேலும் சிலர் இதுவரையில் திரும்பவில்லை. இதையடுத்தே குறித்த இருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற தூதுவர்கள், இராஜதந்திரிகள் சிலர் தொடர்ந்தும் அங்கேயே பணியாற்றுவதற்கு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, இந்தியா, ரஷ்யா, அவுஸ்ரேலியா, தென்ஆபிரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே, பிரான்ஸ், இத்தாலி, சவூதி அரேபியா, கட்டார், மாலைதீவு, பாகிஸ்தான், மியான்மார், பங்களாதேஷ், பலஸ்தீனம், கென்யா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் பணியாற்றுகின்றனர்.