ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்தை வரவேற்கும் கல்முனை மாநகர முதல்வர்

Report Print Mubarak in அரசியல்

அரச சேவையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் மீது தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டு மக்களின் நலன்கருதி பல நல்ல திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

அந்தவகையில், அரச நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு அங்கு நிலவுகின்ற குறைபாடுகளையும் தேவைகளையும் கண்டறிவதோடு நின்றுவிடாது அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு பல்வேறுபட்ட மூலோபாய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார்.

அத்துடன் அரச சேவையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடி, முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி துணிந்திருக்கிறார்.

அவ்வாறே அரச நிறுவனங்களின் பிரதானிகளாக அரசியல் சகாக்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தடை விதித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் இத் தூரநோக்கு சிந்தனையானது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அத்துடன் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து, அழகுபடுத்தி பேணுவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாநகர சபையின் மேயர் என்ற ரீதியில் நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

அதேவேளை மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது எனவும் அவ்வாறு நடைமுறையில் இருக்கும் சட்டங்களும் விதிகளும் திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியிருக்கும் கருத்து யதார்த்தமானதும் வரவேற்கத்தக்கதுமாகும்.

உண்மையில் ஜனாதிபதியின் மக்கள் நலன்சார்ந்த யோசனைகள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படுமாயின் மக்கள் எவ்வித பாரபட்சங்களுமின்றி அரச நிறுவனங்களிடமிருந்து துரித கதியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்பதுடன் மிகக் குறுகிய காலத்தில் அனைத்து துறைகளிலும் எமது நாடு முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கலாம்.

எமது நாட்டுக்கு இப்படியொரு துணிச்சல் மிக்க ஜனாதிபதியின் தேவை இன்று எல்லோராலும் உணரப்பட்டுள்ளது.

அவரது சிறந்த திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.