பெண் அரச ஊழியர் மீது தாக்குதல்! கருணா முன்வைத்துள்ள கோரிக்கை

Report Print Varunan in அரசியல்

அம்பாறை, சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணி புரியும் பெண் அரச உத்தியோகத்தரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின் போது தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று இரவு சம்பவத்தை அறிந்து குறித்த பெண் அரச ஊழியர் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு சென்று நலன் விசாரித்துள்ளார்.

அத்துடன் இதன்போது கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான தாக்குதல் முயற்சி அநாகரீகமானது. இந்த நிலைமை தொடருமானால் இனங்களுக்கு இடையே தேவையற்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.

எனவே சம்பந்தப்பட்ட நபர் சட்ட நடவடிக்கைக்கு உடனடியாக உட்படுத்தப்பட வேண்டும்.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிய நபர் தற்போது தலைமறைவாகி உள்ளார் எனவும், சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் பெண், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தனக்கு ஒரு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.