வாக்களித்தவர்களே கோட்டாபயவை வெறுக்கும் காலம் வந்துவிட்டது! நளின் பண்டார தகவல்

Report Print Varun in அரசியல்

பாரிய மக்கள் எதிர்பார்ப்புகளுடன் 69 லட்சம் வாக்குகளை பெற்று நாட்டில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு ஒரே மாதம் ஆகும் நிலையில் அரச காட்சியிலும், மக்கள் மத்தியிலும் புதிய அரசாங்கம் தொடர்பாக வெறுப்பு நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்தார்.

அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க உதவியவர்கள் இப்பொழுது இந்த குறுகிய காலத்தில் மாற்றம் அடைந்து வருவதை காணலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கள ஊடகம் ஒன்றுடனான நேர்காணலின் போதே இந்த கருத்தித்தினை தெரிவித்தார்.அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது அரசாங்கம் நாட்டில் காணப்படும் அரசாங்க சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்று வருவதாக கூறினார்கள். ஆனால் இன்று அதனையே இவர்கள் செய்கிறார்கள்.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் குறிப்பிட்டிருந்தார் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்க வேண்டும். அது சரியான விடயம் என்று. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் என்ன சொன்னார்கள்?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஐக்கிய தேசிய அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்று விட்டது. நாம் ஆட்சிக்கு வந்தது அதனை மீண்டும் அரசாங்கத்தின் சொத்தாக மாற்றுவோம் என கூறினார்கள்.

ஆனால் அதை செய்தார்கள்? இல்லை. பட்டப்பகலில் மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதாக கூறினார்கள்.

அதனை செய்யவில்லை. மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் ஒருபக்கம் வைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்கி சிறையில் அடைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறார்கள்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தாலும் அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதனால் மக்கள் இப்போது அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்துள்ளார்கள்.

அதேபோல பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்தது ஓய்வு பெற வேண்டும் என்று மகாகல் கந்தே சுதந்த தேரர் அண்மையில் தெரிவித்தார்.

அவர் தான் இந்த ஆட்சியை அமைக்க முன்னோடியாக செயற்பட்டவர்.

அவர் கூட இந்த அரசாங்கம் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது .

சட்டத்தை அரசாங்கம் பிழையாக கையாள்வதை காணக்கூடியதாக உள்ளது. மக்கள் சம்பிக்க ரணவக்கவை கைது செய்யவோ அல்லது ராஜித சேனாரத்னவை கைது செய்யவோ சொல்லவில்லை.

மத்திய வங்கி கொள்ளையர்களையே கைது செய்ய சொன்னார்கள்.அதை செய்யாமல் அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கின்றது. அதன் காரணத்தினால் அரசாங்கம் நாளுக்கு நாள் வாக்களித்த மக்களின் மனங்களில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவித்தார்.