பிணைமுறி மோசடியாளர்களுக்கு எதிராக தயாரானது குற்றப்பத்திரிகை!

Report Print Varun in அரசியல்
70Shares

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டு வருவதாக மின்சக்தி மற்றும் மின்வலு இராசாங்க அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சில தினங்களில் அவை நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கோப் குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர் இதில் தொடர்புபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"டொப் டென்" ஊழல் மோசடி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும், அவை தவிர பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட 8 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

இவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அனைத்து விடயங்களும் அம்பலமாகியுள்ளதாகவும் ஆதாரப்பூர்வமாக அவை நிரூபிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட மின்சக்தி மற்றும் மின்வலு இராசாங்க அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே குறித்த 8 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுவதாக தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;

"டொப் டென்" ஊழல் மோசடி குறித்து 13 பேரின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை நாம் ஊழல் மோசடி மற்றும் எப் சீஐடியினரிடம் சென்று முறையிட்டோம்.

ஆனால் மூன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொஞ்சம் பொறுத்திருங்கள். எதிர்வரும் சில தினங்களில் இது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை முன்னெடுக்கப்படும். கட்டாயம் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அவற்றுக்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. நேற்று ஒருவரிடம் விசாரணை ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எம்மை பிடித்து சிறையில் வைத்து சில நாடகங்களை முன்னெடுத்தார்கள். ஒருவர் சென்று முறைப்பாடு செய்கிறார் . பின்னர் அனுரகுமார திசாநாயக்க வருகிறார்.

அதுபோல எமக்கும் செய்ய சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. அதற்குமாறாக ஆதாரங்களை சேகரித்து நாம் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனக்கெதிராக கேரம்போட் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் நான் சம்பந்தப்படவே இல்லை. விசேட நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

எங்களுக்கு கடந்த அரசாங்கம் அவ்வாறே சித்திரவதை செய்தார்கள். எம்மை சிறையில் அடைத்தார்கள். ராஜித சேனாரத்தன அந்த நேரம் எப்படி சத்தம் போட்டார். ஆனால் இன்று நாய்குட்டியைப் போல ஓடி ஒழிந்துவிட்டார்.

எம்மை சிறையில் அடைத்தபோதும் நாம் வெளியில் வந்து அரசாங்கத்திற்கு எதிராக போராடினோம். ஆனால் ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். கடந்த அரசாங்கம் செய்ததைப்போல கீழ்த்தனமான செயல்களில் நாம் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.