தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் தேர்தல் திணைக்களத்திற்கு திடீர் விஜயம்

Report Print Ashik in அரசியல்

இலங்கை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும், அதே நேரத்தில் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் குறித்த விஜயம் அமைந்திருந்தது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலின்போது மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகளை பெற்று கொள்வது தொடர்பாகவும், அதனை முழுமைப்படுத்தும் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இடம்பெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல், அதேபோன்று மாகாணசபை தேர்தல் தொடர்பான விபரங்களையும், அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் அத்தியட்சகர் ஜெனிற்றன், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மாவட்ட ஊடகவியளாலர்களுடனும், சிநேகபூர்வ கலந்துரையாடிலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.