வடக்கு மற்றும் கிழக்கை பௌத்த சிங்கள நாடு என்று கூற முடியாது! மீண்டும் வலியுறுத்தும் சி.வி. விக்னேஸ்வரன்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களை சிங்கள பௌத்த நாடு என கூறினாலும் வடக்கு மற்றும் கிழக்கை அதில் உள்ளடக்க முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தம் குறித்து தென் பகுதியில் காணப்படும் எதிர்ப்பு தொடர்பாக தெளிவுப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

அடி வாங்கக் கூடும் என்ற பயத்தில் பேராயர் இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றாரா என்று தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடக நிறுவனம் ஒன்று என்னிடம் ஒரு கேள்வியை கேட்டது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் போது வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் மாத்திரம் ஏன் முரண்டு பிடிக்கின்றனர் என்ற கேள்வியை அந்த ஊடகம் கேட்டது.

அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் இறையாண்மை தொடர்பாக எனக்கு தெளிவுப்படுத்த நேரிட்டது.

நாட்டுக்கு புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். எதிர்காலத்தில் புதிய நாடாளுமன்றம் தெரிவாக உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு செய்தி தெளிவாக வழங்கப்பட்டது.

சிங்கள மக்கள் ஒரு விதமாக சிந்திக்கும் போது தமிழ் மக்கள் அதற்கு முற்றிலும் மாறாக சிந்திக்கின்றனர் என்பதே அந்த செய்தி.

புதிய ஜனாதிபதி சிங்கள பௌத்தத்துவத்தை மேம்படுத்த முன்வந்துள்ளார். இதனடிப்படையில், வடக்கில் பௌத்த விகாரை, வழிப்பாட்டு அடையாளங்களை ஏற்படுத்துவதை ஆரம்பித்துள்ளனர்.

வரலாற்றை படிக்காத சில புத்திஜீவிகள் இந்த நாட்டை பௌத்த நாடு என்றும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பது தமிழ் மக்களுக்கு பிரச்சினை அல்ல எனக் கூறுகின்றனர்.

இந்த கருத்து எந்தளவுக்கு எமக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. வடக்கில் பௌத்த விகாரை போன்ற பௌத்த அடையாளங்களை ஏற்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கும் போது, தமிழ் தலைவர்கள் அதனை கண்டு காணாதவர்கள் போல் நடந்துக்கொண்டனர்.

அன்றைய பிரதமர் அவர்களுக்கு 300 கோடி ரூபாய் பணத்தை வழங்குவதாக கூறியமையே இதற்கு காரணம்.

இதன்காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை ஏற்படுத்துவது துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது தலைவர்கள் என்று கூறிக்கொள்வோரால் இந்த நிலைமையை தடுக்க முடியாது போயுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி என்று அரசாங்கம் கூறும் போது நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எமக்கு தொழிற்சாலைகளை வழங்கி வருமானத்தை மத்திய அரசாங்கம் பெற்றுக்கொள்ளும். இதற்காக எமது காணிகளை ஏற்கனவே கொள்ளையிட்டுள்ளனர்.

இதனை தடுக்க எம்மால் முடியாமல் போயுள்ளது. இராணுவத்தை பயன்படுத்தி பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எமது தலைவர்கள் சிந்திப்பதில்லை.

தற்போது ஜனாதிபதியின் கீழ் இருக்கும் இராணுவம் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் தடுத்து நிறுத்த முயற்சிப்பார்கள்.

நாட்டில் காணப்படும் இவ்வாறான சூழ்நிலை காரணமாக நாட்டின் வரலாறு தொடர்பான உண்மையை வெளியிட நேரிட்டது.

சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குறிப்பாக சில பௌத்த பிக்குகள் நாட்டின் வரலாறு தொடர்பான உண்மையை அறிந்துள்ளனர். எனினும், அவர்கள் உண்மை வெளியாவதை தடுத்துள்ளனர்.

சில காலத்திற்கு முன்னர் மேர்வின் சில்வா நடத்திய துட்டகைமுனு நாடகம் மக்களுக்கு நினைவில் இருக்கும். தமிழ் மக்களை இந்த நாட்டில் இருந்து விரட்டி விட்டு இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக மாற்ற அவர்கள் முயற்சித்து வருகின்றனர். எமது தலைவர்களும் இ்ந்த நாட்டை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றனர்.

வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் பண்டைய காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்கள் இந்து, கத்தோலிக்கம் மற்றும் முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்றனர். அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்கள் மீண்டும் இந்து சமயத்தை தழுவிக்கொண்டனர்.

இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சிங்கள பௌத்த நாடு என்ற எண்ணக்கருவிற்குள் உள்ளடக்க முடியாது. இதுதான் உண்மை என்பதால், நான் உண்மையை வெளியிட்டேன். 1956ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு மொழியில் நிர்வாகம் செய்யப்பட்டது.

இதனால், இந்த விடயத்தை முழு நாடும் அறிந்துக்கொள்ள வேண்டும். உலகம் அறிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த விடயத்தை எமது முட்டாள் தலைவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.

நான் இறந்து போனாலும் நாம் முன்வைக்கும் உண்மையை சிங்கள மக்கள் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்ப்பார்கள். ஏற்கனவே சிங்கள இளைஞர், யுவதிகள் உண்மையை தேட ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக தெற்கில் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதை நான் நன்கு அறிவேன். உண்மை கசக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.