தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது!

Report Print Thileepan Thileepan in அரசியல்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது ஜனாதிபதி கோட்டபாயவின் கட்சிக்கு வாக்களிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்கவில்லை. ஆனால், தற்போது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் இளைஞர்கள் பாடசாலை, பேருந்து நிலையம், வைத்தியசாலை என்பவற்றை தாமாக முன்வந்து இளைஞர்கள் வர்ணம் பூசி அலங்கரித்தார்கள்.

தற்போது ஜனாதிபதி கோட்டபாயவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது ஜனாதிபதி கோட்டபாயவின் கட்சிக்கு வாக்களிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளை வான் பிரச்சினை தொடர்பில் பேசியதால் தான் தமிழ் மக்களின் வாக்கு குறைந்தது. தேர்தல் முடிந்து இரண்டு மாதம் முடிவடைந்து விட்டது.

இதுவரைக்கும் வெள்ளை வானும் வரவில்லை. கறுப்பு வானும் வரவில்லை. தூக்க எவரும் வரவில்லை. இதுதான் பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசம். நாங்கள் நீதிமன்றத்தை தவிர, தனிப்பட்ட ரீதியில் எதுவும் செய்ய மாட்டோம். அதனை மக்கள் யோசிக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டபாய மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு தான் தீர்மானங்கள் எடுக்கின்றார். வேலைவாய்ப்பு இன்மை, விவசாயம் இல்லை, நிரந்தரமான தொழில் இல்லை என 5 வருடம் மக்கள் கஸ்டப்பட்டார்கள்.

தேர்தலுக்கு முன்மழை பெய்யாது வறட்சி இருந்தது. தேர்தல் முடிந்து கோட்டபாய வென்ற பின் தான் மழை பெய்தது.

தற்போது குளங்கள் நிறைந்து விவசாயம் செய்கிறார்கள். இனி மக்களின் கைகளில் பணம் இருக்கும். பொய்யான பரப்புரைகளுக்கு செவிசாய்காது எந்தக் கட்சி சரியாக அரசாங்கம் செய்கிறதோ, அந்தக் கட்சியுடன் இருங்கள்.

கடந்த ஆட்சியில் அரசாங்கம் ஒன்று இருந்ததா என்று கூட தெரியவில்லை. மைத்திரிபால ஒருபக்கம் இழுக்க, ரணில் விக்கிரமசிங்க ஒரு பக்கம் இழுக்க கடைசியில் மக்கள் தான் பாதிக்கப்பட்டது.

எங்களிடம் இருந்து அதிக வரி அறவிட்டார்கள். மத்திய வங்கியில் கொள்ளையடித்தார்கள். எனவே சிந்தித்து செயற்படுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.