புதிய கூட்டணியை உருவாக்க இரகசியப் பேச்சு நடத்தும் சிறுபான்மை கட்சிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், றிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக இரகசியமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவரகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி ஆகிய தென் மாவட்டங்களில் போட்டியிட போவதாக தீர்மானித்த பின்னர், இந்த புதிய கூட்டணியை சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த 18 பேர் நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகித்து வருகின்றனர். தமது கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இருக்கும் மாவட்டங்களில் உடன்படிக்கையின் அடிப்படையில் போட்டியிடும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், முஸ்லிம் வாக்காளர்களின் பலம் இருக்கும் பிரதேசங்களில் தமிழ் முற்போக்கு முன்னணியின் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை எனவும் தமிழ் முற்போக்கு முன்னணிக்கு பலம் இருக்கும் பிரதேசங்களில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு தமிழ் முற்போக்கு முன்னணியின் மனோ கணேசன் அணியினர் விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும் திகாம்பரம் அணியினர் விருப்பத்தை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.