தமிழர்களின் பலத்தை மீண்டும் நிரூபிப்போம் - சம்பந்தன் சபதம்

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக - தமிழர்களின் பலத்தை மீண்டுமொரு தடவை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாம் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும்.

அதற்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை இப்போதிலிருந்தே நாம் ஆரம்பிக்க வேண்டும், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போது கூட்டமைபின் எதிர்கால வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இதற்காகக் கட்சியை மேலும் நாம் பலப்படுத்த வேண்டும். நாம் ஒற்றுமையுடன் ஓரணியில் பயணிக்க வேண்டும். எமக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தால் பேசித் தீர்க்கலாம்.

அதைவிடுத்து , முரண்பாடுகளை வளர்க்கக்கூடாது.

தமிழ் மக்கள் தொடர்ந்து எங்கள் தலைமையின் கீழ் ஒன்றாக நிற்கின்றார்கள். ஒரே கொள்கையுடன் நிற்கின்றார்கள் என்பதை விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெளியுலகத்துக்கு - சர்வதேசததுக்குக் காட்ட வேண்டும்.

தமிழ் மகளுககான விழிப்புணர்வுக் கருத்தாடல்களை கிராமங்கள் தோறும் நாம் ஆரம்பிக்க வேண்டும்.எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகவில்லை. உரிமைகளுக்கே முன்ரிமை வழங்குகின்றார்கள் என்பதை தேர்தல் மூலம் இன்னொரு தடவையும் நிரூபிக்க வேண்டும்.

புதிய அரசு தலைமையிலான நாடாளுமன்ற அமர்வுகளில் எமது மக்களின் உரிமைகளுக்காகப் பேச வேண்டிய கட்டங்களில் நாம் பேசியே ஆக வேண்டும்.

அதேவேளை அரசின் வேலைத்திட்டங்களை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்தும் நாம் பேச வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நாம் பெற்றுவதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியை நாடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.