விரைவில் சந்திப்போம்! சம்பந்தனிடம் கோட்டாபய தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

“சிங்கள மக்கள் உங்களுக்குப் பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். அதேபோல் தமிழ் மக்கள் எங்களுக்குப் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.

நாங்கள் இரு தரப்பும் பேசி நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்போம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூற, சந்திப்போம் என்று மாத்திரம் பதிலளித்து விட்டு அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றுள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்குப் பின்னர் உணவகத்தில் நடந்த தேநீர் விருந்துபசாரத்தின்போது நடந்த உரையாடலில் ஜனாதிபதி கோட்டாபயவிடம் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார் என அறியமுடிந்தது.

“ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல் பெரும்பாலான தமிழ் மக்கள் எமக்கு ஆதரவளித்துள்ளனர்.

எனவே, நாங்கள் இருவரும் இரு தரப்பிலும் பிரதான சக்திகளாக இருக்கின்றோம். நாங்கள் இருதரப்பும் ஒன்றுபட்டு தேசிய பிரச்சினைக்குத் தீர்வைக் காண முன்வரவேண்டும்.

அதற்கான பேச்சுக்களை நடத்த நாம் தயாராக இருக்கிறோம்" என்று சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனின் பேச்சை செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய, விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தாம் சந்தித்துப் பேசவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.