கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சுமுகமாக முடிவு! தமிழரசு கட்சிக்கு கூடுதல் இடங்கள்

Report Print Rakesh in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அந்தவகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார்.

நாடாளுமன்ற ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இரண்டு கட்ட சந்திப்புக்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தன. மூன்றாவது கட்டச் சந்திப்பு கொழும்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் அவரின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேன் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

"இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 7, புளொட் 2, ரெலோ 1 என்ற அடிப்படையிலும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 4, புளொட் 2, ரெலோ 3 என்ற அடிப்படையிலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 5, புளொட் மற்றும் ரெலோவுக்கு தலா ஓர் ஆசனமும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 5, புளொட் 1, ரெலோ 2 என்ற அடிப்படையிலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் மூன்று கட்சிகளும் இணைந்து வேட்பாளர்களை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளன" என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது எனவும், இருப்பினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.