ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றன!

Report Print Vanniyan in அரசியல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருப்பதாகவும், தமிழ் மக்களுக்கு ஓர் தீர்வு கிட்டும் வரையில் தொடர்ந்து போராடுவோமெனவும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசு கட்சி தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை ஏற்று செயற்படுவதனாலேயே இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

எப்போதும் தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றுக்கொண்டேயிருக்கும், இக்கட்சியை எப்போதும் வீழ்த்தவே முடியாது.

அத்தோடு கடந்த அரச தலைவர் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றன.

தமிழர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை மறந்துவிடவில்லை, குறிப்பாக இளைய சமூகம் கூட கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினையும் மறந்துவிடவில்லை.

கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்து, நடத்திய கொத்துக்குண்டு, பல்குளல் செல் தாக்குதல்கள், அவர்களுடைய காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் எவற்றையும் எமது மக்கள் மறந்துவிடவில்லை. அதனையே கடந்த அரச தலைவர் தேர்தல் உணர்த்தியுள்ளது.எனவே, எமது தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிட்டும் வரையில் தொடர்ந்தும் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.