ஜனாதிபதியும், பிரதமரும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளனர்!

Report Print Thileepan Thileepan in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்திற்கான ஆளுநராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் ஊடாக பல வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச செய்யவுள்ளார்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இல்லாமல் வன்னிப் பகுதியில் செய்யக் கூடிய பல வேலைகளை ஆளுநர் ஊடாகச் செய்வார்.

நீண்ட நாட்களாக வடக்கிற்கு ஆளுநரை போடாமல் இருந்தார்கள். தமிழ் மக்களுடன் பழகக் கூடிய ஒரு தமிழ் இனத்தைச் சேர்ந்தவரை போட வேண்டும் என்பதற்காக அந்த தாமதம் ஏற்பட்டது.

ஆளுநர் சாள்ஸ் வடபகுதியைச் சேர்ந்தவர். வவுனியா, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் அரசாங்க அதிபராகவும் இருந்துள்ளார்.

அதேபோன்று கப்பல் கூட்டுத்தாபனத்திலும் வேலை செய்துள்ளார். ஆகவே, பொருத்தமான ஒருவரை ஆளுநராக தந்துள்ளார்கள்.

அனைத்து மக்களுக்கும் வேலைத்திட்டங்களை செய்வதாக சொல்லியுள்ளார். என்னை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும், தர்மபால செனவிரட்னவை வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் நியமித்துள்ளனர்.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொருத்தமானர்களுக்கு தற்போது நியமனங்களை வழங்கியுள்ளனர். மக்களுடன் இணைந்து அதனை முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.