அரசாங்கத்தில் இணையும் அளவுக்கு தலையில் எந்த வியாதியும் இல்லை! மங்கள சமரவீர தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் முற்றாக சரிந்து போயுள்ள தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தில் இணையும் அளவுக்கு தனது தலையில் எந்த வியாதியும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதியுடன் இணையத் திட்டம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

தான் இந்த சந்தர்ப்பத்தில் எந்த காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை எனவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக மீண்டும் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் அரசியல் நிலைமையில் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் மூலம் மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு குறைவு என்பதால், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.