ஐ.தே.கட்சியைச் சேர்ந்த மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர்! லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

மனிதாபிமான முகத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் காட்டி அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

இன்னும் சிறிது காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மேலும் சிலரை கைது செய்யத் தயார் நிலைகள் காணப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி போன்ற மிகப் பெரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை பிடிக்கப் போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும், மிகப் பெரிய மோசடிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதற்கு பதிலாக சில்லறை விடயங்களை அடிப்படையாக கொண்டு கைதுகளை செய்து வருகின்றனர். அரசாங்கம் வழங்கிய கைத்துப்பாக்கிக்கு அரசாங்கமே அனுமதிப் பத்திரத்தை வழங்க வேண்டும். இவை சிறிய விடயங்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கே பிணை முறி வழங்கப்பட்டுள்ளது. எனினும், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக 6 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் வரை பிணை முறிகளை விற்பனை செய்துள்ளது.

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவிருந்தது. ஆனால், அதற்கு முன்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் கேள்வி மனுக்களை கோராமல் அரச காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்குகிறது. எமது அரசாங்கம் இந்த காணிகளை வழங்க திட்டமிட்டிருந்ததாக அரசாங்கம் கூறுகிறது. புதிய அரசாங்கம் என்ற வகையில் இதனை இரத்துச் செய்திருக்க வேண்டும்.

இன்னும் சிறந்த விளையாட்டுக்களை நாட்டு மக்கள் எதிர்காலத்தில் காண முடியும். நாங்கள் விரிவான கூட்டணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.