21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால் ஜே.வி.பி மீண்டும் காட்டுக்குச் செல்ல நேரிடும்!

Report Print Steephen Steephen in அரசியல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடக சிறிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கெஸ்பேவை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் ஆசனங்களை கைப்பற்ற முடியாது. மக்கள் விடுதலை முன்னணிக்கு மீண்டும் காட்டுக்குள் செல்ல நேரிடும். ஜாதிக ஹெல உறுமயவும் மீண்டும் காட்டுக்குள் போக நேரிடும்.

அது மாத்திரமல்ல தற்போது பிரதான கட்சிகளுக்கு யாழ்ப்பாணம் பிரதிநிதிகள் இருக்கின்றனர். விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் போன்றவர்கள் பிரதான கட்சிகளின் யாழ்ப்பாண பிரதிநிதிகள். இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக தெரிவாக முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் வெல்ல முடியாது. தமிழரசு கட்சியே வெற்றி பெறும் தற்போது 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அந்த கட்சிக்கு 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதனையே செய்ய முயற்சித்து வருகின்றனர் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.