பொதுத் தேர்தலின் பின்னரே அரசியலமைப்புத் திருத்தம் பற்றி தீர்மானிக்கப்படும்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரே அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தீர்மானிக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படுமா என அண்மையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்கு நிலையான அரசாங்கமும் சிறந்த அரசியலமைப்புச் சட்டமும் இருக்க வேண்டும். அஷரப் அதிகமான நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்காக பிரேமதாச அன்று ஜே.ஆரின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றினார்.

அதில் ஆரம்பித்த அழிவு 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தவர்களாலும் அழித்தே முடிக்கப்பட்டது. எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமில்லை.

இப்படியான சந்தர்ப்பத்திலேயே நாங்கள் வேலை செய்து வருகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் இருந்தவர்கள் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். சர்வதேசத்திற்கு தேவையான வகையில் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து பெரிய அழிவை செய்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாளாவது நாட்டின் அபிவிருத்தி தாமதமடையும். வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர முடியாது.

வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதிக்கு தேவையான கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளது. மார்ச் 3ஆம் திகதி இறுதி நாள். அதுவரை காலம் தாழ்த்தும் காலமாக இது மாறியுள்ளது.

உடனடியாக நாட்டை கட்டியெழுப்பும் தேவை மக்களுக்கு இருக்கின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக அது நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.