குமார் பொன்னம்பலம் இருந்திருந்தால் தமிழர்களுக்கான விடிவு சாத்தியமாகியிருக்கும்: கஜேந்திரன்

Report Print Theesan in அரசியல்

மாமனிதர் குமார் பொன்னம்பலம் மறையாமல் இருந்திருந்தால் தமிழர்களுக்கான விடிவு சாத்தியமாகியிருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்தமாக வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று உதை பந்தாட்ட போட்டியொன்று நடத்தப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

குமார் பொன்னம்பலம் சிறந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். தமிழ் தேசிய விடுதலைக்காக இறுதிவரை குரல் கொடுத்த ஒருவர்.

90 மற்றும் அதற்கு முந்திய காலப்பகுதிகளில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிராக ஓய்வில்லாமல் உழைத்தவர்.

தமிழீழ விடுதலை புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்றார்கள் என்பதனை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதுடன், அதை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தும் செயற்பாடுகளை முழுமையாகவும் தீவிரமாகவும், முன்னெடுத்தவர்.

அவரது படுகொலையுடன் தொடர்புடையவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அது தொடர்பான முழுமையான விசாரணை கூட நடத்தப்படவில்லை.

இன்றுள்ள தலைமைகள் கூட அதனை வலியுறுத்தவில்லை. ஏனெனில் அவரது அழிவு இன்றிருக்கக்கூடிய பலருக்கு வாய்ப்பை கொடுத்திருக்கிறது.

அவர்கள் இலங்கை அரசோடும் சில சர்வதேச சக்திகளோடும் சேர்ந்து தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக அவர்கள் போட்ட அந்த கணக்கை நிறைவேற்றுவதற்காகவே குமார் பொன்னம்பலம் ஐயாவை இந்த படத்தில் இருந்து அகற்றினார்கள்.

அவர் மறையாமல் இருந்திருந்தால் ஜனநாயாக அரங்கிலே விடுதலை புலிகளின் கோரிக்கைகளிற்கு வலுசேர்க்கும் ஒருவராக நிச்சயம் இருந்திருப்பார்.

ஜனநாயக குரலும் விடுதலை புலிகளின் பேச்சுவார்த்தை மேசை குரல்களும் ஒன்றாக இருக்கின்ற போது தமிழர்களுக்கான விடிவு என்பது சாத்தியமாகியிருக்கும்.

அதன் மூலம் பௌத்த பேரினவாத வன்முறைகளை ஓரளவுக்கு முடிவிற்கு கொண்டுவர கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கியிருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் என்ற ஒன்று நடைபெறாமல் தடுத்திருக்க முடியும். இன்று போர் முடிந்து 10 ஆண்டுகளாகியும் விடுதலை பெறமுடியாமல் நாம் தவித்து கொண்டிருக்கிறோம்.

எனவே அவரது ஆத்மா சாந்தியடைவதற்காக தமிழ் தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

அந்த ஒன்றுபடுதலினூடாக நிச்சயமாக எங்களுடைய தேசத்தின் விடிவை சாத்தியமாக்கி கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.