ஐ.தே.கட்சியின் தலைவர் பதவி! அடுத்த வாரத்தில் கூடவுள்ளது நாடாளுமன்ற குழு

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் ஆராய்வதற்காக கட்சியின் நாடாளுமன்ற குழு அடுத்த வாரத்தில் கூடவுள்ளது.

இதன்போது கட்சி தலைவர் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்க கட்சியின் முக்கியஸ்தரான மலிக் சமரவிக்கிரமவே முக்கிய சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஊட்டிக்கு சென்று திரும்பிய பின்னர் அவருக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பை அவரே ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்ற வேளையில் ரவி கருணாநாயக்கவும், நவின் திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து தலைவர் பதவி திரும்ப பெறப்படக்கூடாது என வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது சிங்கள பௌத்த வாக்காளர்களின் வாக்குகளை இழந்துள்ளது.

இவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கரு ஜயசூரிய, ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் இணைப்பில் தலைமைத்துவ சபை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் தாம் சென்ற கிராமங்களில் எல்லாம் ரணில் விக்ரமசிங்கவுக்கு செல்வாக்கு இல்லை என்றும் எனவே தான் சஜித் பிரேமதாசவை தலைவராக்குமாறு கோருவதாகவும் தலதா அத்துகோரள வாதிட்டார். இதனை ரஞ்சித் மத்தும ஆமோதித்தார்.

இதன்போது சஜித் பிரேமதாசவுக்கு தலைவர் பதவி வழங்கப்படாது போனால் மாற்று அணி ஒன்றை பற்றி யோசிக்க போவதாக ஹரின் பெர்ணான்டோ, சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பெரேரா ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.

தலைமைத்துவ பிரச்சனை எதிர்வரும் தைப்பொங்கலுக்குள் தீர்க்கப்படவேண்டும் என்று மனோ கணேசன் தெரிவித்த நிலையில் உள்ளக பிரச்சனையை தீர்த்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் தலைவர் தெரிவுக்காக நாடாளுமன்ற குழு அடுத்த வாரம் கூட்டப்பட முடிவெடுக்கப்பட்டது.