கூட்டமைப்பின் எம்.பிக்களை கோட்டாபயவின் அரசு கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்!

Report Print Rakesh in அரசியல்
771Shares

நாட்டைப் பாதுகாக்கும் ஒற்றையாட்சியை எதிர்த்தும், நாட்டைப் பிளவுபடுத்தும் சமஷ்டியை வலியுறுத்தியும் கருத்துக்களைத் தெரிவித்து வரும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரையை அடியோடு நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.

தனது ஆட்சிக்காலத்தில் ஒற்றையாட்சியையும், புத்தசாசனத்தையும் பாதுகாத்தே தீருவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தமையில் என்ன தவறு இருக்கின்றது?

அவர் நாட்டின் தலைவராக இருக்கின்ற படியால் ஒற்றையாட்சியைப் பாதுகாத்தே தீர வேண்டும். அதேவேளை, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டும் ஜனாதிபதியாகத் தெரிவான அவர், புத்தசாசனத்தையும் பாதுகாத்தே தீர வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளால் கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவாகவில்லை. வெறும் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டுமே அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதைக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமஷ்டி வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் கூட்டமைப்பினர் ஒற்றையாட்சியை விரும்பமாட்டார்கள் என்பது உண்மை தான். பிரபாகரனால் பெற முடியாத சமஷ்டியை எப்படி இவர்களால் பெற முடியும்?

இந்த நாட்டில் பெரும்பான்மையாக சிங்கள மக்களே இருக்கின்றார்கள். அவர்களின் கொள்கையையும், கலாசாரத்தையும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலமே இன நல்லிணக்கத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியும்.

இந்நிலையில், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் இன வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசு உடன் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.