கோட்டாபயவின் பழிவாங்கலுக்கு நீதித்துறைதான் முடிவு கட்டும்! பிணையில் வந்த ரஞ்சன் தெரிவிப்பு

Report Print Rakesh in அரசியல்
117Shares

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு நீதித்துறைதான் முற்றுப்புள்ளி வைக்கும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்து தமது சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கலாம் என்ற நப்பாசையுடன்தான் கோட்டாபய அரசு ஆட்சிப்பீடம் ஏறியது. ஆனால், இதற்கெல்லாம் நீதித்துறை இடமளிக்கவே மாட்டாது.

கோட்டாபய அரசின் பழிவாங்கல் பட்டியலில் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்னவுக்கு அடுத்தபடியாக - மூன்றாவது நபராக நான் கைதுசெய்யப்பட்டேன். ஆனால், நாங்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளை கோட்டாபய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் இதற்கு நீதித்துறைதான் முற்றுப்புள்ளி வைக்கும்" - என்றார்.

அனுமதிப் பத்திரம் புதுப்பிக்காத கைத்துப்பாக்கியையும், 127 ரவைகளையும் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றுமுன்தினம் இரவு

கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இரண்டு சரீரப் பிணைகளிலும் 5 இலட்சம் ரூபா காசுப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டது

நுகேகொட, கங்கொடவில நீதிவான் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.