ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி சூழ்ச்சி?

Report Print Murali Murali in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவின் கைதுக்குப் பின்னால் புதிய அரசாங்கத்தின் சூழ்ச்சி இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புற நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரே அவரது கைதுக்குப் பின்னால் சூழ்ச்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புற மற்றும் இராஜாங்க அமைச்சர் ரமேஸ் பத்திரண ஆகியோர் அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்றைய தினம் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே பொலிஸார் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்தனர். அரசாங்கம் அதில் தலையிட்டு செயற்பட்டிருந்தால் அவரால் நேற்றைய தினத்தில் பிணையில் வெளியே வந்திருக்க முடியாது.

கடந்த அரசாங்கம் எமது உறுப்பினர்களைக் கைது செய்து மூன்று நான்கு மாதங்களுக்கு விளக்கமறியலிட்டது. ஆனாலும் அண்மையில் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டபோது அதில் அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடவில்லை என்பதை புரியமுடியும்.

நாங்கள் தலையீடு செய்திருந்தால் அவர்களால் வெளியே வந்திருக்கமுடியாது. பொய்யான குற்றச்சாட்டுக்களையாவது நாங்கள் முன்வைத்திருப்போம். கடந்த அரசாங்கமே பொய்யான குற்றச்சாட்டுக்களால் உறுப்பினர்களை உள்ளே தள்ளியது.

அரசாங்கம் இன்று அந்த விவகாரத்தில் தலையீடுகளை செய்யவில்லை என்பதை மக்களால் புரிந்துகொள்ளமுடியும். ஊழல் மோசடி ஆணைக்குழுவில் நாங்கள் சென்று முறைப்பாடு வழங்கிய குற்றச்சாட்டைக் கொண்ட பலரும் உள்ளனர்.

அந்த இடத்திலிருந்து பொலிஸார் பணிகளை ஆரம்பித்தால் சிறந்தது என்றும், சில்லரைத்தனமான செயற்பாடுகள் அநாவசியமானது என்றும் மக்கள் உணர்கிறார்கள்.

எனினும் யாராவது சிறிய குற்றத்தை செய்திருந்தால் பொலிஸார் அதற்கு நடவடிக்கை எடுப்பது சாதாரண விடயம். ஆனாலும் ரஞ்சன் ராமநாயக்க மீது ஐக்கிய தேசியக் கட்சியினரே பல குற்றச்சாட்டுக்களை அண்மைய நாட்களாக சுமத்தினார்கள்.

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு ரஞ்சன் ராமநாயக்கவே காரணம் என்றும், மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கு வேட்புமனுவை வழங்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரே கூறியிருந்த நிலையில் அவருடைய இல்லத்தில் உள்ளவை என்ன என்பதையும் அவர்களே அறிந்திருக்கக்கூடும்.

ஆகையால் இந்தக் கைதுக்குப் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியினரே செயற்பட்டிருக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.