தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்! மஹிந்தவின் சகா கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அங்கஜன் இராமநாதன், அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 72ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது சிங்களமொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு கிடையாது எனவும் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அடையாளம் என்பதுடன் வெவ்வேறு இனங்களை ஒன்றிணைக்கின்றதாக அமையும் எனவும் அங்கஜன் இராமநாதன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.