சஜித்திற்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அறிவில்லையா? இராஜாங்க அமைச்சர் கேள்வி

Report Print Varunan in அரசியல்
465Shares

2009ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை, துப்பாக்கிதான் இருந்தது என இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் தலைவர்களின் கதையை கேட்டு அன்ன சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்.

இது முதல் தடவையல்ல. யார் இந்த அன்னம் சின்னதில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச? அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாச தமிழ் இளைஞர்களுடன் சண்டையிட பூவை கொடுக்கவில்லை ஆயுதத்தை தான் கொடுத்தார்.

அவருடைய மகனுக்கு வாக்களிக்க தமிழ் மக்களுக்கு அறிவில்லையா? தமிழ் இளைஞர்களை போன்று தான் ஜெ.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி காலத்தில் சிங்கள இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.

இதனால் அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து நீங்கள் பெற்ற பயன் என்ன?

நான் கிழக்கு மாகாணசபையில் கல்வியமைச்சராக இருந்த வேளை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொடுத்திருக்கிறேன்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் சேதமடைந்திருந்த பாடசாலைகளை திருத்தியமைத்து கொடுத்திருந்ததை மறந்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.

ஜனாதிபதியை கொண்டு வந்தவர்கள் சிங்கள மக்கள். ஆனால் இப்போது தமிழர்களும், முஸ்லிம்களுன் வேலைவாய்ப்பு தாருங்கள், அபிவிருத்தி செய்து தாருங்கள் என்று எம்மிடம் வருகிறார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமக்கு வாக்களித்துவிட்டு வாருங்கள் அனைத்தையும் பெற்று தருவோம் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், நகர முதல்வர், பொதுஜன பெரமுனவின் பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.