சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் - தேசிய சுதந்திர முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வீழ்ந்து போயுள்ள சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

பிட்ட கோட்டே பிரதேசத்தில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குரல் பதிகள் மூலம் தெரியவந்துள்ள சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட அநீதிக்கு உள்ளானவர்களுக்கு அரசாங்கம் தலையிட்டு நிவாரணத்தை வழங்க வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் அரசியல் பழிவாங்கலில் இணைந்து செயற்பட்டதாக தொலைபேசி உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ள மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி, எதிரணியினரை அடக்க அரச கட்டமைப்பை பயன்படுத்தி விதம் தொடர்பான கசப்பான உண்மை ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் மக்களுக்கு உறுதியாகியுள்ளது எனவும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.