அழைப்பின்றி கூட்டத்திற்கு சென்ற சந்திரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்
1087Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறவிருந்த கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பின்றி சென்றதால், ஏற்பட்ட குழப்பமான சூழலை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற இருந்ததுடன் இந்த குழப்பம் ஏற்பட்டதை அடுத்து மைத்திரியும் கூட்டத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வந்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட அமைப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து சந்திரிக்காவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டை முன்னிட்டு கூட்டத்தில் கலந்துக்கொள்பவர்களுக்கு வழங்க பாற்சோறு, பலகாரங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன என கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் சிலருடன் இணைந்து கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் நடைபெறவிருந்த 5ஆவது மாடிக்கு சென்றிருந்தார்.

அங்கு முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்தும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆரியவதி கலப்பத்திவுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

சந்திரிக்கா வந்திருப்பதை கட்சியின் தலைமையகம் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியதுடன் அவர் எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை. அத்துடன் அவர் வந்திருப்பது பிரச்சினையல்ல எனவும் கூறியுள்ளார்.

எனினும், கூட்டத்திற்கு வந்திருந்த தொகுதி அமைப்பாளர்கள் எதிர்ப்பு வெளியிட்ட போதிலும் சந்திரிக்கா அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார். இதனையடுத்து தொகுதி அமைப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் கூட்டத்தை நடத்த முடியாமல் போயுள்ளது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இன்று நடந்த செய்தியார் சந்திப்பில் செய்தியாளர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி கட்சியின் தலைமையகத்திற்கு வருவதற்கு தடையில்லை எனவும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமான நிலைமை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்த போது, முன்னாள் ஜனாதிபதி வேறு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தயாசிறி கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததால் தொகுதி அமைப்பாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் எனவும் அப்போது தான் அங்கு இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.