துறைமுகத்தில் உள்ள குப்பைகளை அகற்றுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் கட்டளை

Report Print Malar in அரசியல்

துறைமுகத்திற்குள் தேங்கிக் கிடக்கும் பெருமளவிலான குப்பைகள் அகற்றப்படாமையால் அவற்றை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்த வணிக மற்றும் கைத்தொழில் முன்னேற்ற சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சுத்தமான, நீதிக்கு கட்டுப்படுகின்ற மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்பும் செயற்பாட்டின் முதலாவது முன்னுதாரணமாக துறைமுக வளாகம் திகழ வேண்டும்.

நீங்கள் இத்துறைமுகத்தை பற்றி பேசினீர்கள். எனவே அதைப் பற்றி நான் ஒன்றும் கூறத் தேவையில்லை. துறைமுகம் என்பது நாட்டின் உயிர்நாடி. இதனை அபிவிருத்திச் செய்ய வேண்டும். அதிலுள்ள ஒரு அங்குல நிலத்தையேனும் வீணடிக்கக் கூடாது.

இங்கே பெருமளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சுத்தமான இடமாக வைத்திருக்க வேண்டும். நான் சென்ற பல இடங்களில் அவை உரியமுறையில் காணப்படவில்லை.

கொழும்பு நகரிற்கு வருகின்ற பெருந்தொகையான குப்பைகள் துறைமுகம் ஊடாகவே செல்கின்றது. அவை இன்னும் சுத்தப்படுத்தப்படவில்லை.

என்னுடைய வேண்டுகோள்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நான் வேண்டுகோளொன்றை முன்வைத்தால் அது உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.